‘‘எங்கள் கட்சியை உடைத்தால் விளைவு மோசமாக இருக்கும்’’ பாஜகவுக்கு மெகபூபா எச்சரிக்கை

0
0

மக்கள் ஜனநாயக கட்சியை உடைக்கும் முயற்சியில் மத்திய அரசும், பாஜகவும் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும், மீண்டும் தீவிரவாதம் அதிரிக்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸூக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது.பின்னர் நேர் எதிர் கொள்கைகளை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

இருகட்சிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள், நெருக்கடிக்கு இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது. இதனால் மெகபூபா பதவி விலகினார். அங்கு தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெகபூபா முப்திக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். மெகபூபாவின் குடும்ப ஆட்சி மற்றும் பேராசை காரணமாகவே கூட்டணி உடைந்து, ஆட்சி பறிபோனதாக அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

மெகபூபாவை ஒரம்கட்டி விட்டு பாஜகவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘மக்கள் ஜனநாயக கட்சியை டெல்லி உடைக்க முயற்சித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அதனை எதிர்கொள்ள டெல்லி தயாராக வேண்டும்.

காஷ்மீரில் பிரச்னை தான் பெரிதாகும். சலாஹூதீன், யாசின் மாலிக் போன்ற ஏராளமான பிரிவினைவாதிகள் மீண்டும் உருவாகி விடுவார்கள். மாநிலத்தில் பிரிவினையும், தீவிரவாதமும் அதிகரிக்கும். நானும் அவர்கள் போன்ற சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்’’ எனக் கூறினார்.

இதனிடையே மெகபூபா பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, விரக்தியில் உள்ள மெகபூபா இதுபோன்று பேசுவதாகவும், அவரது மோசமான ஆட்சியில் ஏற்கெனவே தீவிரவாதம் மீண்டும் உயிர் கொண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.