எங்களைத் தரக்குறைவாகப் பேசிய இங்கிலாந்து ஊடகங்களுக்கு அடி: வெற்றி குரேஷியாவின் மோட்ரிச் பெருமிதம்

0
0

உலகக்கோப்பை அரையிறுதியில் பின்னிலையிலிருந்து எழுச்சி பெற்று இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வெளியேற்றி கனவைத் தகர்த்து அதிர்ச்சியளித்த குரேஷிய அணியின் ஸ்ட்ரைக்கர் லுகா மோட்ரிச், இங்கிலாந்தின் ஊடகங்களும், பண்டிதர்களும் எங்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக மதித்திருக்க வேண்டும். மட்டமாகப் பேசியிருக்கக் கூடாது, கடைசியில் அதற்கான விலையைக் கொடுத்தனர்.

இங்கிலாந்தின் பெரிய பிரச்சினையே அதன் ஊடகங்கள்தான், ஒரு வகையான ஆங்கிலத் திமிர் பிடித்து எதிரணியினரை கேலி செய்வது, ஒன்றுமில்லாத அணி என்பது, ‘களைப்படைந்த அணி என்பது என்று தங்கள் வாய்ஜாலங்களைக் காட்டுவது வழக்கம்.

அன்று டெலி ஆலி, லுகா மோட்ரிச் கால்கள் வழியாக பந்தை அடிக்க ஆர்வம் என்று தூண்டிவிட்டார், அதை வைத்துக் கொண்டு இங்கிலாந்தின் ஊடகங்களும், பண்டிதர்களும் குரேஷியாவை மட்டம்தட்டிப் பேசினர், ‘களைப்படைந்த’ அணி என்றும் வயதான அணி என்றும் தரந்தாழ்த்திப் பேசினர். ஆனால் கடைசியில் அதற்கான பெரிய விலையை தோல்வி ரூபத்தில் கொடுத்தது இங்கிலாந்து.

இந்நிலையில் குரேஷிய நட்சத்திர வீரர் லுகா மோட்ரிச் ஐடிவிக்குக் கூறும்போது,  “இங்கிலாந்து பத்திரிகையாளர்கள், கால்பந்து பண்டிதர்கள் தொலைக்காட்சியில் பேசினர், பேசிக்கொண்டேயிருந்தனர். குரேஷியாவை குறைத்து மதிப்பிட்டனர். இது மிகப்பெரிய தவறு என்று இப்போது புரிந்திருக்கும்.

அவர்கள் பேசிய அத்தனைப் பேச்சையும் எங்களுக்கான ஊக்கமருந்தாக எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் எழுதுவதையும் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்தோம், அதன் பிறகு சரி இன்று யார் களைப்படைந்த அணி என்று காட்டுவோம் என்று உறுதிபூண்டோம். அவர்கள் விவேகாம இருக்க வேண்டும், எதிராளியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் களைப்படைந்த அணியல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தோம். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நாங்களே ஆதிக்கம் செலுத்தினோம். கூடுதல் நேரத்துக்கு முன்பே ஆட்டத்தை முடித்து அவர்களைக் காலி செய்திருக்க வேண்டும். எங்கள் கனவு நிறைவேறியது. குரேஷிய வரலாற்றில் இது பேசப்படும். நாங்கள் கர்வமாக உணர்கிறோம்.

இவ்வாறு கூறினார் மோட்ரிச்.

தடுப்பாட்ட வீரர் வ்ரசால்கோ, “இது புதிய இங்கிலாந்து அவர்கள் தங்கள் நீண்ட பாஸ்களை ஆடுவதில் மாறிவிட்டனர், லாங் பால்களை எடுப்பதில் மாற்றம் கண்டுவிட்டனர் என்று பொதுவாகப் பேசப்பட்டது, ஆனால் நாங்கள் அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அவர்கள் அவ்வாறு மாறிவிடவில்லை என்பது தெரிந்தது” என்றார்.

 

குரேஷியா அணி உலகக்கோப்பை இறுதிக்குள் நுழையும் 13வது அணியாகும். 2010-ல் ஸ்பெயின் புதிய இறுதிப் போட்டியாளராக நுழைந்தபிறகு இப்போது இறுதியில் புதிய அணி குரேஷியா. 1998-ல் அரையிறுதிக்குள் நுழைந்தது, இப்போது இறுதிக்குள் நுழைந்தது.