ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிக்கு வந்த பாஜக இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?- மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கேள்வி

0
0

ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக 4 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 3 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கு காரணம் கூறாத மத்திய அமைச்சர், தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தாங்கள்தான் காரணம் எனக்கூறுவது ஏற்புடையதல்ல. இதற்கு நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவது காரணமாக இருக்கலாம்.

ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு சொல்வது வழக்கமான ஒன்றுதான். அப்படிதான் அமித்ஷாவும் கூறியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொத்தாம்பொதுவாக குற்றம் சொல்லாமல் அதை நிரூபிக்க வேண்டும். அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர்கள் மீது தவறு இருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவிக்கட்டும்.

ரூ.2000 கோடி நிதி எங்கே?

திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் அழித்துவிடமுடியாது. 2ஜி, நிலக்கரி, ரயில்வே ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிதான் பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்த 4 ஆண்டுகளில் யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கொடுத்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு ரூ.20 லட்சம் கோடி வருமானம் சென்றுள்ளது. இந்தத் தொகை பிற மாநிலங்களுக்கு செலவிடப்படுகிறது. உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண் டிய ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டும் இன்னும் வழங்கவில்லை.

லோக் ஆயுக்தாவில் முதல்வர் மீது புகார் அளிக்க வகையில்லை என்றால், அதற்கு சட்டப்பேரவையில் திமுக குரல் கொடுக்காமல் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வது ஏற்புடையதல்ல.

விரைவில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றார்.