ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வந்தேன்; மூட நம்பிக்கையை ஒழிக்க அல்ல: தமிழிசைக்கு என்னை விமர்சிக்க உரிமை இல்லை- கமல் ஆவேசம்

0
1

 ஊழலை ஒழிக்கவே தாம் அரசியலுக்கு வந்தேன். மூட நம்பிக்கையை ஒழிக்க அல்ல. என்னுடன் இருப்பவர்கள் என்னைப்போன்று இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாது. தமிழிசைக்கு என்னை விமர்சிக்க என்ன உரிமை உள்ளது என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன், அமாவாசை நேரத்தில் கொடி ஏற்றியுள்ளார் போலி பகுத்தறிவுவாதம் என்று தமிழிசை சொல்கிறாரே?

அவர் சொன்னது சரியாக இருக்கலாம், என்னைப் போலி என்று சொல்ல தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்று தெரியவில்லை. நான் பகுத்தறிவாளன். ஆனால், மக்கள் நீதி மய்யத்தில் உள்ளவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது. என் வீட்டில் உள்ள என் மகளே கூட அப்படி இருப்பார் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

நான் இங்கு வந்து இருப்பது பகுத்தறிவு கொள்கையைப் பரப்பி, மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காக என்றால் தவறாக இருக்கலாம். ஆனால் நான் இங்கு வந்திருப்பது, ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு அனைவர் உதவியும் தேவைப்படுகிறது. ஒருவேளை தமிழிசை சொல்வது உண்மையாக இருக்கலாம், தேதி பற்றி எனக்கு தெரியாது.

பகுத்தறிவாளர் பிம்பம் உங்களுக்கு இருக்கும்போது ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று அழைக்கிறார்கள். அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

சர்ச்சை தான், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது பழைய கூக்குரல். அப்படிக் கூப்பிடக் கூடாது தான். அதுபற்றி வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று எனது கட்சிக்காரர்கள் இனி யாரும் கூறாதபடி பார்த்துக்கொள்கிறேன். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன். ஆனால் நிகழ்ந்ததற்கு நான் பொறுப்பல்ல. கட்சியில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்திருந்தால் அவர்களைக் கண்டிக்கவும் தயங்க மாட்டேன்.

சத்துணவு முட்டை ஊழல் விவகாரத்தில் ஒரு வருடம் முன்பே நாங்கள் எங்கள் வலைதளத்தில் குறிப்பிட்டுச் சொன்னோம், ஆனால் அப்போது அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை, எங்கே நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று மார் தட்டியவர்கள் தான் மீண்டும் அதில் சிக்கியுள்ளார்கள். மீண்டும் அதைச் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் ஒழிப்பதுதான் முக்கியக் கடமையாக உள்ளது.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து?

நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தல் அப்படியெல்லாம் ஒரே குவியலாக இருக்கக் கூடாது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது பற்றி?

நிறைய தண்ணீர் இருக்கு. பாலைக் காணோம்.

பாலைச் சேர்க்க என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

பாலைச் சேர்க்கக் கூடாதுங்க, அது பாலாகவே இருக்கணும்.

கோவையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகையில் கல்லூரி மாணவி இறந்த விவகாரம்?

இது ஆபத்தான செயல். கண்டிக்கத்தக்க செயல். கல்விக் கட்டிடம் உயர்ந்து இருந்தால் மட்டும் போதாது. கல்வித் தரமும் உயர வேண்டும்.

தமிழகத்தில் அமித் ஷா வருகையால் தாமரை மலரும் என பாஜகவினர் கூறுவது?

அவர்கள் எந்த தாமரையைச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.