உ.பி.யில் தலித் துணை முதல்வர்? – அகிலேஷ், மாயாவதி கூட்டணியை உடைக்க பாஜக புதிய வியூகம்

0
0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் துணை முதல்வராக தலித் சமூகத்தை சேர்ந்தவரை பதவியில் அமர்த்த பாஜக திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் மாயாவதி -அகிலேஷ் யாதவ் கூட்டணியை முறியடிக்க முயற்சி நடைபெறுகிறது.

உ.பி.யில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் வரும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து போட்டியிட்டன. இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் அஜீத்சிங்கும் இணைந்ததால் பாஜகவிற்கு தோல்வி ஏற்பட்டது.

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்ய இதே வியூகத்துடன் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இதையடுத்து எதிர்கட்சிகளின் முயற்சியை முறியடிக்க பாஜக புதிய திட்டம் வகுத்துள்ளது. உ.பி.யில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சுமார் 24 சதவிகிதம் உள்ளனர். இவர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முதல்வராக நான்கு முறை பதவி வகித்தார்.

எனவே தாழ்த்தப்பட்டோர் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் திருப்பும் பொருட்டு, அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக முன்னிறுத்துவதன் மூலம் அந்த சமூக வாக்குகளை கவர முடியும் என பாஜக எண்ணுகிறது. இதன் மூலம் அனைத்து சமூக வாக்குகளையும் திரட்டும் மாயாவதி – அகிலேஷ் யாதவின் திட்டத்தை முறியடிக்க பாஜக வியூகம் வகிக்கிறது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டின் இணையதளத்திடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘சமீபத்தில் தேசிய தலைவர் அமித் ஷா நடத்திய உ.பி.யின் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த யோசனை வெளியானது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததால் எதிர்கட்சிகளை சமாளிக்க, இதை தவிர வேறு வழியில்லை. அமைச்சரவை விரிவாக்கத்தில் விட்டுப்போன சில பிற்படுத்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

உ.பி.யில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகள் பாஜகவின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலம் பாஜகவிற்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து தன் சுற்றுப்பயணத்தை உ.பி.யில் ஏற்கெனவே தொடங்கி விட்டார். ஜூலையின் 14-ல் ஆசம்கர், 15-ல் மிர்சாபூர், 21-ல் ஷாஜஹான்பூர் என மூன்று பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.

உ.பி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிமெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. எனினும், அதன் வாக்கு சதவிகிதம் எதிர்கட்சிகளை விட குறைவாக இருந்தது நினைவுகூரத்தக்கது