உலக மசாலா: மிகப்பெரிய குடும்பம் – இந்து தமிழ் திசை

0
0

உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் உக்ரைன் நாட்டில் இருக்கிறது. டோப்ரஸ்லாவ் கிராமத்தில் வசிக்கும் 87 வயது பாவெல் செமன்யுக் குடும்பம்தான் இந்தப் பெருமைக்குரியது. இவருக்கு 13 குழந்தைகள். 127 பேரன், பேத்திகள். 203 கொள்ளுப் பேரன், பேத்திகள். 3 எள்ளுப் பேரன், பேத்திகள் என மொத்தம் 346 பேர் இந்தக் குடும்பத்தில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ”எங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகள்வரை பெயர்களை நினைவில் வைத்திருக்கிறேன். மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. நாங்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம்.

எங்கள் குடும்பம் பெருகப் பெருக, இந்தக் கிராமத்திலேயே வீடுகளைக் கட்டி விடுவோம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் ஒன்று கூடிவிடுவோம். பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுகள் செய்ய வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட ஆண்டு முழுவதுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்! எங்கள் குடும்பத்திலிருந்து மட்டும் 30 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்

கள். இவர்களுக்கே ஒரு பேருந்து தேவைப்படுகிறது. சமீபத்தில் தான் உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது கின்னஸுக்கும் விண்ணப்பித்திருக்கிறோம்” என்கிறார் பாவெல் செமன்யுக். தற்போது 192 பேர் அடங்கிய மிகப் பெரிய இந்தியக் குடும்பம், உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை வைத்திருக்கிறது. நிச்சயம் பாவெல் இதை முறியடித்துவிடுவார்.

ஒரு கிராமமே ஒரே குடும்பமாக இருக்கிறதே!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரையன் லிம், மனைவி யூன்கியங் சோ மற்றும் குழந்தைகளுடன் 2012-ம் ஆண்டு காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். சோ கார் ஓட்டிக்கொண்டு வரும்போது திடீரென்று பேச்சு பிரையனின் பெற்றோர் பற்றித் திரும்பியது. மிகவும் மோசமாகப் பேசினார் சோ. பேசுவதை நிறுத்தும்படி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் பிரையன். வாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் சோ. உடனே காரை நிறுத்தும்படிக் கேட்டார். நிறுத்தாததால், தானே பிரேக்கை அழுத்தினார். அதைத் தடுத்தார் சோ. கோபம் அதிகமான பிரையன் ஓடும் காரிலிருந்து கதவைத் திறந்துகொண்டு குதித்துவிட்டார். இதில் அவரது உடல் மோசமாகப் பாதிக்கப்பட்டது. உடல் தேறியதும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தார் பிரையன். “கணவன், மனைவிக்குள் சண்டையும் சச்சரவும் சகஜம். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். அல்லது வீட்டுக்குச் சென்று விவாதத்தைத் தொடர்ந்திருக்கலாம். பின் சீட்டில் இரண்டு குழந்தைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் குதித்த பிரையன் மீதுதான் குற்றம்” என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மீண்டும் வேறு நீதிமன்றத்துக்குச் சென்றார் பிரையன். “பெற்றோரைப் பற்றி இழிவாகப் பேசினால் யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாது. பேச்சை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறார். காரை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறார். எதையும் கண்டுகொள்ளாததால்தான் அவர் கோபத்தில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். இதனால் உடலாலும் மனதாலும் பிரையன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோதான் குற்றவாளி” என்று தீர்ப்பு கூறினார் அந்த நீதிபதி. வழக்கு மீண்டும் மேல் முறையீடுக்குச் செல்ல இருக்கிறது.

இருவரும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கலாம்…