உலக மசாலா: பூமிக்கு அடியில் ஒரு தேவாலயம்!

0
0

ர்மினியாவின் அரிஞ் கிராமத்தில் வசித்த 44 வயது லெவோன் அராகெல்யானிடம் அவரது மனைவி டோல்ஸ்யா, தோட்டத்தில் உருளைக் கிழங்குகளைப் பறித்து வரச் சொன்னார். மண்ணைத் தோண்டியவரால், தோண்டுவதை நிறுத்தவே முடியவில்லை. கடந்த 1985-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 23 ஆண்டுகள் நிலத்தைக் குடைந்து, பாதாளத்தில் ஒரு தேவாலயத்தையே உருவாக்கிவிட்டார்! தனி மனிதரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த இடத்தைப் பார்ப்பதற்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

“லெவோன் மண்ணைத் தொட்டதும் மந்திரம் போட்டதுபோல் இருந்ததாகச் சொன்னார். மண்ணைத் தோண்டத் தோண்ட, ஏதேதோ குரல்கள் கேட்டதாகவும் அவைதான் தன்னைத் தோண்டும்படிக் கட்டளையிட்டதாகவும் கூறினார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என்று 23 வருடங்கள் நாள் தவறாமல் இந்தப் பணியைச் செய்து முடித்திருக்கிறார். முதலில் சில அடி ஆழம் தோண்டுவது சிரமமாக இருந்திருக்கிறது. எரிமலைக் கற்கள் வந்த பிறகு, வேலை எளிதாகிவிட்டது. நவீனக் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், சுத்தியல், கடப்பாறை, மண்வெட்டி போன்ற கருவிகளை மட்டுமே வைத்து, அவர் ஒருவர் மட்டுமே இந்தப் பாதாள தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். 280 சதுர மீட்டரில், 20 மீட்டர் ஆழத்தில், 7 அறைகளுடன் இது அமைந்திருக்கிறது.

அனைத்து அறைகளின் சுவர்களும் ஓவியங்கள், சிற்பங்களால் செதுக்கப்பட்டிருக்கின்றன. மின் விளக்கு, காற்றோட்ட வசதி என்று சகலமும் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. தனி மனிதர் கைகளால் உருவாக்கிய இடம் என்று சொன்னால் எல்லோரும் ஆச்சரியப்படுகிறர்கள். தினமும் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவார். அப்போது கூட அந்த வேலையில்தான் மனம் செல்கிறது என்பார். இப்படி அர்ப்பணிப்புடன் செய்ததால்தான் இதை உருவாக்க முடிந்திருக்கிறது. இங்கிருந்து வெளியேற்றப்பட்ட 450 டிரக் லோடு கற்களையும் மண்ணையும் பல்வேறு பணிகளுக்காகப் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டார். இந்த மாபெரும் பணியைச் செய்த லெவோன், 2008-ம் ஆண்டு 67 வயதில் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இந்த வேலைதான் அவர் உயிரைப் பறித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு கடுமையாக வேலை செய்யும் ஒருவர் என்னுடன் நீண்ட நாட்கள் இருக்க மாட்டார் என்பதை உணர்ந்தே இருந்தேன். அவர் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதே நேரத்தில் தனி ஒரு மனிதர் உலகம் வியக்கும் அளவுக்கு ஒரு பணியைச் செய்துவிட்டுப் போனதில் நானும் எங்கள் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் லெவோனை நினைத்துப் பெருமைகொள்கிறோம். இந்த உழைப்பைப் புரிந்துகொண்டவர்களால்தான் பாதாள தேவாலயத்தை ரசிக்க முடியும். ஆர்வமாக வரும் சுற்றுலாப் பயணிகளை நானே அழைத்துச் சென்று, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்வேன். முதல் தளம் லெவோனுக்கானது. அவரது கருவிகள், உடைகள், டைரி, படங்கள், புத்தகங்கள், காலணிகள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறோம். கடைசி அறையில் சிறிய தேவாலயம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பாராட்டுவதைக் கேட்கும்போது லெவோன் பட்ட கஷ்டத்துக்குப் பலன் இருப்பதாக நினைத்துக்கொள்வேன்” என்கிறார் டோஸ்யா.

தனி மனிதரின் அபாரமான சாதனை!