உலக மசாலா: திரைப்படத்தை விஞ்சிய காதல்!

0
0

உக்ரைன் நாட்டில் தோண்டப்பட்ட ஒரு கல்லறையில், ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்த எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. ஆச்சரியமடைந்த ஆய்வாளர்கள், இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ந்தனர். “இவர்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கணவன், மனைவியாக இருக்கவேண்டும். Vysotskaya, Wysocko என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கு என்று தனித்தனி வரையறைகள் அப்போது இருந்திருக்கின்றன. இந்த எலும்புக்கூடுகள் இருந்த கோலத்தைப் பார்க்கும்போது, மனைவி இறந்த பிறகு இருவரையும் சேர்த்துப் புதைத்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

இறந்த கணவனை விட்டுப் பிரிய மனம் இல்லாததாலும் அடுத்த பிறவியில் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்திலும் இந்தப் பெண் கணவனுடன் சேர்ந்து உயிர் துறக்க முடிவு செய்திருக்க வேண்டும். வலி இல்லாமல் உயிர் போகக்கூடிய விஷத்தை அருந்தி, கணவன் உடலுக்கு அருகில் படுத்து, அவர் தலைக்கு அடியில் வலது கையை வைத்து, முகத்தைத் தன் முகத்தோடு உரசிக்கொண்டு, கால்களைக் கணவன் மீது போட்டு, இடது கையை அவரது மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்திருக்கிறார். இந்தப் பெண்ணின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தச் செயலை அந்தப் பெண்ணே விரும்பிச் செய்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். கட்டாயத்தின்பேரில் இப்படி ஒரு நெருக்கத்தைக் கொண்டுவர முடியாது” என்கிறார் உக்ரைன் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்.

திரைப்படத்தை விஞ்சிய காதல்!

துருக்கியின் இஸ்தான்புலில் மெவ்ஜூ உணவகத்தில் ஒரு பெண் சிங்கத்தைக் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்து, காட்சிக்கு வைத்திருக்கின்றனர். உணவகத்தின் மத்தியில் ஒரு சிங்கம் சென்றுவரக் கூடிய அளவுக்கான இடத்தில் இரண்டு புறமும் கண்ணாடியாலும் மேற்பகுதி கம்பிகளாலும் மூடப்பட்டிருக்கிறது. பெண் சிங்கம் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கிறது. குழந்தைகள் சிங்கத்துக்கு அருகில் சென்று ஓடினால் அதுவும் கூடவே ஓடுகிறது. கூண்டை விட்டு வெளியே வருவதற்குப் பெரும் முயற்சி செய்கிறது. சிங்கத்தின் நடவடிக்கைகளை ரசித்தபடியே மக்கள் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.

இதே உணவகத்தில் பஞ்சவர்ணக்கிளிகள், அரிய பறவைகள், முதலைகள், குதிரைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்து,ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டார். விலங்குகளைத் துன்புறுத்துவதாக உணவகத்தின் உரிமையாளருக்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. ஆனால் சட்டப்படி எல்லா அனுமதியையும் பெற்றே இந்த விலங்குகள் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்கிறார் இதன் உரிமையாளர் சென்ஸிக். விஷயம் பெரிதாகி அரசாங்கம்வரை சென்றுவிட்டது. இப்போது விசாரணை ஆரம்பித்திருக்கிறது. முதல்கட்டமாக சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கூண்டை 3 மாதங்களுக்குள் எடுத்து விடும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களைக் கவர வேறு வழியா இல்லை?