உலக மசாலா: சூப்பின் விலை 1,37,277 ரூபாய்!

0
0

சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள நூடுல் சூப் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிண்ணம் சூப்பின் விலை 1,37,277 ரூபாய்! ‘ஹாவோஸோங்ஹாவோ பீஃப் நூடுல் சூப்’ என்ற பெயரில் இயங்கும் உணவகத்தில்தான் விலை மதிப்பு மிக்க சூப் விற்பனை ஆகிறது. இந்த உணவகம் ஏற்கெனவே பிரபலமானதுதான். ஆனால் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த சூப் விற்பனையை ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கே வரும் வாடிக்கையாளர்கள், மெனுவில் சூப்பின் விலையைக் கண்டதும் அதிர்ச்சியடைகிறார்கள். பிறகு, தவறுதலாக அச்சாகியிருப்பதாக நினைத்து ஆறுதலடைகிறார்கள். அந்த சூப்பை ஆர்டர் செய்யும்போதுதான், மெனுவில் உள்ள விலை உண்மையானது என்பதை அறிகிறார்கள். உடனே மெனுவைப் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி, சூப்புக்கு இலவச விளம்பரம் தேடித் தந்துவிடுகிறார்கள். இந்த உணவகத்தின் சூப்புக்கு அடுத்த இடத்தில் இருப்பது தைவானின் ‘நு பா பா’ உணவகத்தின் சூப்தான். 22,732 ரூபாய்! முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்குமான வித்தியாசமே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது!

விலை உயர்ந்த சூப்பில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு, “உலகிலேயே விலை அதிகமுள்ள 12 பொருட்களை இதில் சேர்க்கிறோம். இதில் 4 பொருட்கள் வானிலிருந்தும் 4 பொருட்கள் நிலத்திலிருந்தும் 4 பொருட்கள் கடலிலிருந்தும் பயன்படுத்துகிறோம். தலைசிறந்த 12 சமையல் கலைஞர்களால் சூப் தயாரிக்கப்படுகிறது. உணவகத்துக்கு வந்தவுடன் சூப் ஆர்டர் செய்து சாப்பிட இயலாது. ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி வைத்துவிட வேண்டும். தேவையைப் பொறுத்தே சூப்புக்கு வேண்டிய பொருட்களைத் தயார் செய்வோம். அதனால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. அதேபோல் செலவும் அதிகம் ஆகிறது. சூப்பின் விலையை 1,37,277 ரூபாய் என்று வைத்தும் கூட எங்களால் இந்த சூப்பிலிருந்து லாபம் ஈட்ட முடியவில்லை. இதற்கு மேலும் விலை வைக்க மனமில்லை. வாடிக்கையாளர்களுக்கு உலகின் உன்னதமான சூப்பைத் தருகிறோம் என்ற மனநிறைவுக்காகவே இதைச் செய்து கொடுக்கிறோம். சூப் விற்பனையை ஆரம்பித்தபோது பலரும் கிண்டல் செய்தனர். விலையைக் கேட்டு மயக்கம் வருவதாகச் சொன்னார்கள். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எங்களிடம் நூற்றுக்கணக்கான சூப் வகைகள் விற்பனையாகின்றன. அவற்றில் உலகின் விலை அதிகமான சூப்பும் ஒன்று. மாட்டு இறைச்சி சூப் ஒரு முழு மாட்டின் விலையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். சிலர் நாங்கள் ஏமாற்றுவதாகப் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். விலை உயர்ந்த சூப்பை வாங்கச் சொல்லி யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. ஏமாற்றுவதில்லை. தேவைப்படுபவர்களுக்குச் செய்து கொடுக்கிறோம். இந்த சூப்பைச் சாப்பிட்டவர்கள் மீண்டும் சாப்பிட வருகிறார்கள் என்றால், அதன் சுவையைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்கிறார் உணவகத்தின் மேலாளர் யான்.

பணமும் பொறுமையும் இருந்தால்தான் இந்த சூப்பை சுவைக்க முடியும்!