உலக மசாலா: ஐயோ… மீன்கள் பாவம்…

0
0

துருக்கியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி ‘யார் கோடீஸ்வரர் ஆக விரும்புகிறீர்கள்?’. இதில் 26 வயது சூ அயன் என்ற பொருளாதாரப் பட்டதாரி பெண் கலந்துகொண்டார்.

 ‘சீனப் பெருஞ்சுவர் எங்கே அமைந்திருக்கிறது?’ என்ற கேள்வி வந்தது. இதற்கு சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் என்று 4 நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். இந்தக் கேள்விக்கு சூ அயனால் பதில் அளிக்க இயலவில்லை. அவர் லைஃப்லைனைப் பயன்படுத்தி, பார்வையாளர்களிடம் சரியான விடை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வையாளர்களில் 51% பேர் சீனா என்று பதில் அளித்தனர். பாதிப் பேர் சீனா என்றும் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா என்றும் பதில் அளித்ததால் குழப்பமடைந்தார் சூ அயன். அவருக்குச் சீனா என்று ஏற்றுக்கொள்ளத் துணிச்சல் இல்லை. அடுத்த லைஃப்லைனைப் பயன்படுத்தி, தோழியிடம் விடை கேட்டார்.

சீனா என்று அவர் பதில் சொன்னதும், அதையே தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரவலான விவாதத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது. ‘உலகிலேயே நீளமான சுவர் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ‘சீனப் பெருஞ்சுவர் எங்கே அமைந்திருக்கிறது?’ என்ற கேள்வியிலேயே சீனா இருக்கும்போது, இதற்கு இத்தனை லைஃப்லைன்களைப் பயன்படுத்த வேண்டுமா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னொரு சாரர், ‘பெயரில் சீனா இருந்ததால்தான், இப்படிக் கேள்வியிலேயே விடை வைத்திருப்பார்களா என்று குழப்பம் அடைந்திருக்கிறார். சூ அயனை மட்டும் குறை சொல்லாதீர்கள். 49% பேர் தவறான விடையைத் தானே தந்திருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வீர்கள் என்று கேட்கிறார்கள். துருக்கியின் பிரபல இசையமைப்பாளர் குறித்த அடுத்த கேள்விக்குத் தவறாக விடை அளித்து, போட்டியில் இருந்து வெளியேறினார் சூ அயன். “என்னிடம் இருக்கும் லைஃப்லைன்களை என் விருப்பத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன்” என்று தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதில் அளித்திருக்கிறார் இவர்.

கேள்வி உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது!

சீனாவில் காறை எலும்பு (Collarbone) பகுதியில் மீன்களை நீந்தவிடும் ‘ஃபிட்னஸ் சேலஞ்’ 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இன்று சீனாவைத் தாண்டி, பல ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களுக்கு தோள்பட்டையில் உள்ள காறை எலும்புப் பகுதியில் குழி விழுகிறது. இந்தக் குழிக்குள் சிறிது தண்ணீரை ஊற்றி, உயிருடன் இருக்கும் சிறிய மீன்களை நீந்தவிடுகிறார்கள். மீன்கள் நன்றாக நீந்தினால் இந்தச் சவாலில் வெற்றி பெற்றதாக அர்த்தம். இந்தச் சவாலை வைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஃபிட்னஸ் சேலஞ்சில் வெற்றி பெறும் பெண்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி, பலரையும் சவாலுக்கு இழுக்கிறார்கள்.

ஐயோ… மீன்கள் பாவம்…