உலகத் தமிழ் இணைய மாநாடு கோவையில் தொடக்கம்: நாளை மாலை நிறைவடைகிறது

0
0

தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகம், உத்தமம் அமைப்பு மற்றும் தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு ஆகியவை இணைந்து நடத்தும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோவையில் நேற்று தொடங் கியது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு துணைவேந்தர் கே.ராமசாமி தலைமை வகித்தார். உத்தமம் அமைப்பின் தலைவர் அப்பாசாமி முருகை யன் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து, தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

இந்திய மொழிகளில் அடுத்த நூற்றாண்டில் தமிழின் வளமை, இருப்பு குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மின்னூல், மின்னிதழ் போன்றவை இல்லாமல், தமிழுக்கான இடம் பற்றி யோசிக்க வேண்டும். தமிழுக்கு என்று தனி பல்கலைக்கழகம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் 60 லட்சம் பக்கங்களைப் பார்வையிட முடியும். 25 ஆயிரம் நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பலருக்கும் தெரியாது. இதை பார்த்து ஒடிசா மாநிலத்தில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கணினியின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்லும் வகையில், பள்ளி மாணவர் களுக்கான புதிய பாடத்திட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2,895 ‘கியூஆர்’ குறியீடு பாடத் திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை 2 லட்சம் மாணவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவன நிர்வாகி மு.பொன்னவைக்கோ, மாநாட்டுத் தலைவர் கு.கல்யாணசுந்தரம், இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் தலைவர் மு.அனந்த கிருஷ்ணன், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியோர் பேசினர்.

இம்மாநாடு நாளை (ஜூலை 8) மாலை வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான ஆய்வுக் கட்டு ரைகள் வாசிக்கப்படவுள்ளன.