உலகக் கோப்பை கால்பந்து 2018: சீறிய சிதேன், சிதறிய புகழ்!

0
0

அது 2005 –ம் ஆண்டு. ரியல் மாட்ரிட், வில்லாரியல் ஆகிய இரண்டு ஸ்பெயின் அணிகளுக்கு இடையே மாட்ரிட் நகரின் புகழ்பெற்ற கால்பந்து மைதானத்தில் ஒரு போட்டி. அந்தப் போட்டியின் 90 நிமிட ஒளித்தொகுப்பே ‘சிதேன்: ஏ 21 செஞ்சுரி போர்ட்ரைட்’ எனும் ஆவணப்படம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டக்ளஸ் கார்டனும் அல்ஜீரியாவைச் சேர்ந்த பிலிப்பியும் சேர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள். 17 கேமராக்களைப் பயன்படுத்தி அந்தப் போட்டியை அவர்கள் காட்சிப்படுத்தினார்கள். அந்தப் போட்டியினூடே ‘சினதின் சிதேன்’ என்ற தலைசிறந்த வீரனின் வாழ்க்கையை அவர்கள் விவரித்த விதம் சுவாரசியமாக இருக்கிறது.

தலைமுறைக்கு ஒருவர்

100 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் கொண்ட மைதானத்தில்தான் எல்லா வீரர்களும் கால்பந்து விளையாடுகிறார்கள். 2.5 மீட்டர் உயரமும் 7.32 மீட்டர் அகலமும் கொண்ட கட்டத்துக்குள் பந்தைத் தள்ளுவதே அவர்களது சவால். அவர்கள் அனைவரும் 11 வீரர்களை எதிர்த்துத்தான் விளையாடுகிறார்கள். கால்கள்தாம் அவர்களது ஆயுதம். சிறுவயது முதலே அவர்கள் விளையாடுகிறார்கள். களமும் திறனும் வாய்ப்பும் சமமாகவே உள்ளன. இருப்பினும், ஒரு தலைமுறைக்கு ஒன்று அல்லது இரண்டு சிறந்த வீரர்களே உருவாகிறார்கள்.

பீலேவுக்கு இணையாக அவர் தலைமுறையில் யாருமில்லை. அதே போன்றே மாரடோனாவுக்கு இணையாக அவர் தலைமுறையில் யாருமில்லை. மாரடோனாவுக்குப் பின் தனித்துவத் திறன்மிக்க வீரர்கள் என்று யாரையும் தனித்துப் பிரிக்க முடியாத வண்ணம், ஒரு முழுமையான குழு விளையாட்டாகக் கால்பந்தாட்டம் மாறியது. அந்தக் காலகட்டத்தில் பிரான்ஸில் உருவான வீரரே ‘சினதின் சிதேன்’. பீலேயைப் போன்று நளினமோ மாரடோனோவைப் போன்று வேகமோ இன்றைய மெஸ்ஸியைப் போன்று நளினம் கலந்த வேகமோ அவருக்குக் கிடையாது. அவரிடம் காணப்பட்ட மன உறுதியும் விடாமுயற்சியும் போராட்ட குணமும் அதற்கு ஈடாக அமைந்தன.

ரசிகர்களின் வீரர்

2005-ல் நடந்த அந்தப் போட்டியில் சிதேன் ரியல் மாட்ரிட் அணியின் சார்பாக விளையாடுகிறார். அந்தப் போட்டியின் முடிவு என்ன ஆகும் என்று சிதேனுக்குத் தெரியாது. பிரம்மாண்டமான திரையில், வழுவழுப்பான மொட்டைத் தலையுடன் ஜென் மன நிலையைப் பிரதிபலிக்கும் சாந்த முகத்துடன், அவர் மூச்சிரைக்க வியர்வை சொட்ட விளையாடுகிறார். உடன் ஆடும் வீரர்களை உற்சாகப்படுத்துகிறார். ரசிகர்களைப் பார்த்துக் கைகாட்டுகிறார்.மகிழ்ச்சியில் குதிக்கிறார். சோகத்தில் கத்துகிறார்.

ஏமாற்றத்தில் தரையை உதைக்கிறார். எதிர் அணி வீரர்களுடன் மல்லுக்கட்டுகிறார், நடுவருடன் வாக்குவாதம் செய்கிறார். திடீரென்று கேமராவைப் பார்த்துச் சிரிக்கிறார். ‘சிதேன்’, ‘சிதேன்’ எனும் கூச்சல் கேட்டு, நாமும் முணுமுணுக்கத் தொடங்குகிறோம்.

நாமும் அந்தப் போட்டியினுள் இருக்கிறோம். நமக்கும் மூச்சிரைக்கிறது. நாமும் அவருடன் சேர்ந்து விளையாடுகிறோம். பந்து அவர் காலை விட்டு விலகிப் பிறர் கால்களில் தஞ்சம் அடையும்போது எல்லாம், நமக்கு சிதேனின் வாழ்க்கைச் சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. அந்தப் போட்டியின் இறுதியில் அவர் நடுவரால் வெளியேற்றப்படுகிறார். இந்தப் படத்தில் நடந்தது போன்றே 2006-ல் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சிதேன் வெளியேற்றப்படுவார் என்று கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மீண்டும் சிதேன்

2005-ல் நடந்த போட்டியுடன் சிதேன் கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். அவரின்றி 2006 உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி தடுமாறியது. அந்தப் போட்டிகளில் பல மோசமான தோல்விகளைச் சந்தித்தது. பின் அதிர்ஷ்டவசமாகத் திக்கித் திணறியே உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. சிதேன் இல்லாமல், பிரான்ஸ் கால்பந்து அணியே இல்லை என்பதைப் பயிற்சியாளர் உணர்ந்தார். ஆகவே, பயிற்சியாளர் சிதேனிடம் பேசியும் மன்றாடியும் அவரை மீண்டும் விளையாட வைத்தார்.
 

சிதேன் மீண்டும் அணிக்குத் திரும்பியவுடனே பிரான்ஸ் அணிக்குத் தலைவரானார். ஓய்வுக்குப் பின் திரும்பியதால், தொடக்கச் சுற்றுகளில் அவர் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. பிரான்ஸும் தட்டுத் தடுமாறித்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆனால், அதற்குப் பின் நடந்தது எல்லாம் நம்பவே முடியாத அற்புதங்கள்.

காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சிதேன் வெளிப்படுத்திய ஆட்ட நேர்த்தி உலகை வியக்கவைத்தது. அந்தப் போட்டியில் உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெயின் அணியை 3-1 என்ற கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. காலிறுதியில் கால்பந்து ஜாம்பவானான பிரேசிலை பிரான்ஸ் வீழ்த்தியது. அரையிறுதியில் போர்ச்சுக்கலை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

திகைக்கவைத்த திருப்பம்

இறுதிப் போட்டியில் இத்தாலியுடன் பிரான்ஸ் மோதியது. உலகமே பிரான்ஸ்தான் வெல்லும் என்று அப்போது நம்பியது. கால்பந்து ரசிகர்களின் நாயகனாக சிதேன் உருவாகி இருந்தார். ரசிகர்கள் சிதேனுக்காக ஆர்ப்பரித்தார்கள். போட்டி விறுவிறுப்பாகச் சென்றது. 1-1 என்ற கணக்கில் கோல் அடித்து இரு அணிகளும் சமமாக இருந்தன. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

ஒரு ஜென் துறவியைப் போன்று அமைதியான முகத்துடன் தியான நிலையில் விளையாடி வந்த சிதேன், திடீரென்று சினங்கொண்டு தன் தலையால், ஒரு காளையைப் போல முட்டி, ‘மார்கோ மெடராஸ்ஸி’எனும் இத்தாலிய வீரரைக் கீழே தள்ளினார். நெஞ்சைப் பிடித்தபடி அந்த வீரர் சுருண்டு விழுந்தார். மைதானமே அதிர்ச்சியில் உறைந்துபோனது. தொலைக்காட்சிகளில் போட்டியைப் பார்த்த ரசிகர்கள் மூச்சடைத்துப் போனார்கள்.

உலகையே உலுக்கிய அந்தச் சம்பவம் மட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால், பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றிருக்கும். சிதேனும் கால்பந்து உலகின் நாயகனாக என்றும் நிலைத்திருப்பார். வரலாறு அவருக்குக் கருணை காட்டவில்லை. அவர் வில்லனாக என்றும் நிலைத்துவிட்டார்.

இந்த ஆவணப்படத்தின் இறுதியிலும், சிவப்பு அட்டை காட்டப்பட்டு நடுவரால் மைதானத்திலிருந்து சிதேன் வெளியேற்றப்படுவார். தலையைக் குனிந்தபடி வெளியேறுவதுடன் சிதேன் படம் முடிவுற்றது. சிதேன் என்ற சகாப்தமும் அதன் பிறகு நடந்த 2006 உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியுடன் அதே போன்று முடிவுற்றது பெரும் சோகமே.

தொடர்புக்கு: [email protected]

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” – கவுதம் கார்த்திக்