உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

0
0

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை மீறி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டுள்ள நிலையில், அதை மதிக்காமல் கலந்தாய்வை தொடரப்போவதாக இந்திய மருத்துவக் குழு அறிவித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஆணையிட வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்றக் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழில் அத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வினாவுக்கு 4 வினாக்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கடந்த 10 ஆம் தேதி தீர்ப்பளித்தது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு தவறான வினாக்களை எழுப்பியதால் இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் சரியான பரிகாரம் ஆகும். இத்தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டியது சிபிஎஸ்இ, இந்திய மருத்துவக் குழு ஆகியவற்றின் கடமை ஆகும். ஆனால், தீர்ப்பை மதிக்க இந்திய மருத்துவக் குழு மறுப்பது சரியல்ல.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை செயல்படுத்த மறுப்பதற்காக இந்திய மருத்துவக் குழு கூறியிருக்கும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். தவறான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதும், அதனடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப் பட வேண்டும் என்பதும் சிபிஎஸ்இ-க்குஉயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மட்டுமே என்றும், மருத்துவக் கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தங்களுக்கு நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மருத்துவக் கலந்தாய்வை தொடரப் போவதாகவும் இந்திய மருத்துவக் குழுவின் அதிகாரிகள் ஆங்கில நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் தவறான வினாக்கள் கேட்கப்பட்டது தான் இந்த வழக்குக்கு அடிப்படை என்பதால் நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ, அதன் துணைச் செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் மட்டுமே எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு மட்டுமே நேரடியாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இந்திய மருத்துவக் குழு எதிர் தரப்பாக சேர்க்கப்படாததால் அதற்கு நேரடியாக ஆணை பிறப்பிக்கப்படவில்லை. ஆனாலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டதால், ஏற்கெனவே வெளியிடப்பட்ட தரவரிசை செல்லாததாகிவிட்டது. அதன்பின் எந்த தரவரிசை அடிப்படையில் இந்திய மருத்துவக் குழு கலந்தாய்வை நடத்த முடியும்? புதிய தரவரிசை அடிப்படையில் புதிதாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால், பழைய கலந்தாய்வை நிறுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கலந்தாய்வை தொடரப்போவதாக மருத்துவக் குழு கூறியிருப்பது குழந்தைத் தனமானது ஆகும். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற கலந்தாய்வுகளும், அதனடிப்படையில் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஒதுக்கீடுகளும் தலைகீழாக மாறக்கூடும். இந்த நேரத்தில் கலந்தாய்வை இந்திய மருத்துவக் குழு தொடர்ந்து நடத்தினால் அது மேலும், மேலும் குழப்பங்களுக்கே வழி வகுக்கும்.

எனவே, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கி, புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிப்பதற்கு பொறுப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும், அதை நிர்வகிக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் உடனடியாக இந்திய மருத்துவக் குழுவை தொடர்பு கொண்டு ஏற்கெனவே வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல் செல்லாததாகி விட்டதாக தெரிவிக்க வேண்டும்; புதிய தரவரிசைப் பட்டியல் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்பதால் அதுவரை கலந்தாய்வை நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.