உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

0
0

சிறைச்சாலையில் தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தற்போதைய அரசாங்கத்தின்கீழ் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள கருத்து:

”இன்றுள்ள உத்தரப் பிரதேச அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. பீதியை ஏற்படுத்தும் சூழ்நிலைதான் உள்ளது. சிறைக்குச் செல்லும் குற்றவாளிகள் அங்கு யாராவது நம்மைக் கொல்லக்கூடும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. இது அரசாங்கத்தின் தோல்வி. மாநில மக்கள் மிகவும் பயந்துபோய் உள்ளனர். மாநிலத்தில் இதற்கு முன்புவரை இத்தகைய தவறான மற்றும் குழப்பமான ஒரு நிலை இருந்ததில்லை.”

இவ்வாறு தனது கருத்தை அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை (திங்கள்கிழமை) பாக்பத் மாவட்ட சிறை வளாகத்தில் தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் ஜெயிலர், துணை ஜெயிலர், தலைமைக் காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பஜ்ரங்கியின் வழக்கறிஞர் விகாஸ் ஸ்ரீவஸ்தவா, பஜ்ரங்கியின் உயிருக்கு ஆபத்து உள்ளது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு முன்பே தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், பஜ்ரங்கியின் மனைவி சீமா சிங், அவரது கணவர் மாநில போலீஸின் என்கவன்ட்டர் பட்டியலில் இருந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.