உத்தரபிரதேசத்தில் முத்தலாக் விவாகரத்து அளித்து தனி அறையில் அடைக்கப்பட்ட பெண் பட்டினியால் வாடி உயிரிழந்த பரிதாபம்

0
0

மேற்கு உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் ஸ்வாலி நகரைச் சேர்ந்தவர் ரஸியா. இவருக்கு 2006-ல் நயீம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஏப்ரலில் தனது 6 வயது மகன் அகமதுவுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரஸியாவை, நயீம் தொலைபேசியில் அழைத்து முத்தலாக் கொடுத்து விட்டார். பிறகு அவரை மீண்டும் மணமுடிப்பதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்த நயீம், தனி அறையில் அடைத்துவிட்டார்.

உணவு, குடிநீர் இன்றி ஒரு மாதம் அறையில் அடைக்கப்பட்டதால் ரஸியாவின் உடல்நலம் குன்றியது. ரஸியாவின் பெற்றோர் கேள்விப்பட்டு அவரை மீட்டனர். ஒரு மாதமாக பரேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஸியாவை கடந்த செவ்வாய்க்கிழமை லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். இந்நிலையில் வழியிலேயே உயிரிழந்தார் ரஸியா. இது தொடர்பாக புகார் அளிக்க பரேலியின் ‘மேரா ஹக் (எனது உரிமை)’ எனும் அமைப்பின் தலைவர் பர்ஹத் நக்வீ உதவியுள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீயின் 2-ம் தாய் மகளான பர்ஹத், முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பர்ஹத் நக்வீ கூறும்போது, “ரஸியாவை 2-ம் தாரமாக மணந்த நயீம், முதல் மனைவியையும் முத்தலாக் செய்துள்ளார். இவரை உடனே கைது செய்ய வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என்றார். இதனிடையில், நயீம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முத்தலாக் செய்ததால், சிறை செல்ல நேரிடும் என அஞ்சிய நயீம், ரஸியாவை அடைத்து வைத்துள்ளார்.