உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி; மாயார் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்டுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை- நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

0
0

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், மாயார் வனப்பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கும் பணியில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகிய பகுதிகள், யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப் பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் ரிசார்ட் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘மாயார் யானைகள் வழித்தடத்தில் 39 காட்டேஜ் வளாகங்கள் உள்ளதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில், 12 காட்டேஜ்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 27 காட்டேஜ்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இதன்மூலமாக, மேற்கண்ட காட்டேஜ் உரிமையாளர்கள் அனு மதி இல்லாமல் வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருவது தெரியவரு கிறது. எனவே, சம்பந்தப்பட்ட காட்டேஜ்களை மாவட்ட ஆட்சியர் மூட வேண்டும். மற்ற 12 காட்டேஜ்களின் உரிமையாளர்கள், 48 மணி நேரத்தில் உரிமங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அனுமதியில்லாத பட்சத்தில் அவற்றையும் மூட வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யும் பணியில் நேற்று முதல் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், யானைகள் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 39 காட்டேஜ் வளாகங்களில், 27 காட்டேஜ்களை 48 மணி நேரத்தில் காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு வரு கிறது.

அதன்படி, 10 ரிசார்ட்டுகளை கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், 15 ரிசார்ட்டுகளை சோலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், 2 ரிசார்ட்டுகளை உதகை வட்டார வளர்ச்சி அலுவலரும் ‘சீல்’ வைக்கும் பணிகளை மேற்கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவில் வீடுகள் ஏதும் இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப் பட தேவையில்லை’ என்றார்.