உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா? | Siva movie missing in tamilpadam 2

0
0

சென்னை: ரஜினி, கமல் என அனைத்து நடிகர்கள் படத்தையும் கலாய்த்து வெளிவந்துள்ள தமிழ்ப்படம் 2வில் சிவாவின் படம் ஒன்றைக் கூட மருந்துக்கும் கலாய்க்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2. நேற்று ரிலீசான இந்தப் படத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழின் முன்னணி நாயகர்கள் அனைவரின் படக் காட்சிகளையும் கலாய்த்திருந்தனர் இப்படத்தில். முதல் பாகத்தில் இருந்து கூடுதலாக இதில் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை.

இப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சூப்பர் என்று விமர்சித்து வருவதால், திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பாரபட்சமில்லாமல் அனைவரையும் வச்சு செஞ்சிருக்கிறார் என சமூகவலைதளத்தில் அமுதனுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

ஆனால், படத்தில் ஒரு மிகப்பெரிய குறை உள்ளது. அது என்னவென்றால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் படத்தை மட்டும் இப்படத்தில் ஒரு காட்சியில் கூட கலாய்க்கவில்லை என்பது தான் அது.

சென்னை 28, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, கலகலப்பு, கலகலப்பு 2 என சிவா ஹீரோவாக நடித்த படங்கள் ஏராளம் இருக்கிறது. அதில் கலாய்ப்பதற்கும் ஏராளமான வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தும் தன் ஹீரோவைத் தவிர மற்ற அனைவரையும் மட்டும் அமுதன் கலாய்த்திருப்பது மிகப்பெரிய ஓரவஞ்சனையாக இருக்கிறது.