இளம்பெண் மீது மர்ம நபர்கள் தாக்கு: சிகிச்சை அளித்த போலீஸாருக்கு அதிர்ச்சி: 60 கிலோ கஞ்சா வைத்திருந்தது அம்பலம்

0
0

போரூர் வளசரவாக்கம் அருகே இளம்பெண் ஒருவரிடம் வம்பிழுத்த நபர்கள் அவர் முகத்தில் கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வைத்திருந்த சூட்கேசில் 60 கிலோ கஞ்சா இருந்தது.

சென்னை போரூர் அருகே வளசரவாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் சூட்கேசுடன் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்து வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தப்படி சென்றனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர்கள் அந்த இளம்பெண்ணிடமிருந்து சூட்கேசை பறிக்க முயன்றனர். அப்போது இளம்பெண் சூட்கேசை தரமறுக்கவே அவர்களில் ஒருவர் இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டி சூட்கேசை பறிக்க முயன்றார். அப்போது அவர் கூச்சலிடவே அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் வழிப்பறி நடக்கிறது என்று அவர்களை பிடிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த அந்த நபர்கள் தப்பிச்சென்றனர். பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை மீட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இளம்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. போரூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்ப முனைந்தனர். ஆனால் அந்த இளம்பெண் போலீஸாரை தவிர்த்து செல்வதிலேயே முனைப்பாக இருந்தார்.

போலீஸார் விடாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். அவர் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இளம்பெண் புகார் அளிக்காமல் அங்கிருந்து செல்வதிலேயே குறியாக இருந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது சூட்கேசை போலீஸார் சோதனையிட்டபோது அதற்குள் 60 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அவரிடம் வழிப்பறி நடக்க இருந்த முயற்சியில் தாக்கப்பட்டார் என்று நினைத்த போலீஸாருக்கு அவர் கஞ்சா கடத்தி வந்ததும் அதன் மீது நடந்த வாக்குவாதத்தில் தாக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இளம்பெண்ணுக்கு தெரிந்த நபர்கள்தான் அவரை தாக்கியுள்ளனர் என்றும், அவரிடமிருந்த கஞ்சா பைகள் அடங்கிய சூட்கேஸை பறிக்கும் முயற்சியில் தான் தாக்குதல் நடந்துள்ளது என்பதை புரிந்துக்கொண்ட போலீஸார் அந்த நபர்கள் யார், இளம்பெண் யாரிடமிருந்து கஞ்சாவை வாங்கிவந்தார், எங்கு கொண்டுச் செல்கிறார். அவருக்கு பின்னால் உள்ள கூட்டம் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.