இலக்கின் மீதான ஆர்வத்தைப் பின்தொடருங்கள்; பணத்தை அல்ல: மாணவர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுரை

0
0

நிறைய மக்கள் பணத்தைப் பின்தொடர்ந்து ஓடுகின்றனர். மேலும் அது கிடைக்கவும் செய்கிறது. ஆனால் இலக்கின் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், பணம் தானாக தேடிவரும் என்று கேஜ்ரிவால் பேசினார்.

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு புதுடெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பேசுகையில், ”பணம், உயர் பதவிகள் இவற்றின் பின்னால் ஓடும் மனோபாவம் மக்களிடையே இருப்பதைப் பார்க்க முடிகிறது. நீங்கள் அதிக பணத்தைத் துரத்திக்கொண்டு ஓடினால், அது உங்களிடமிருந்து வரும். ஒரு உண்மை என்னவென்றால் வாழ்க்கையில் பணம் ஈட்டியவர்கள் எல்லோருமே அதைத் துரத்திக்கொண்டு ஓடியவர்கள் இல்லை. அவர்கள் தங்கள் இலக்குகளைத் தொடர்ந்து ஓடினார்கள், அதனால் அவர்களுக்கு பணம் தானாகவே ஊற்றெடுத்தது.

இன்று பெரிய பதவியில் உள்ளவர்கள் அதைத் துரத்திக்கொண்டு ஓடியவர்கள் இல்லை. அது அவர்களைத் தேடி வந்தது.

ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், ஆட்சியில் உள்ள ஓட்டைகளைப் பற்றி ஆளும் கட்சிகளை நோக்கி கேள்வியெழுப்புவதன் மூலம் அரசியல் அமைப்பிற்கு மாணவர்கள் பங்களிப்பு செய்யலாம்.

நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் நான் உங்களை நம்புகிறேன். நாட்டில் இளைஞர்களாக இருப்பவர்கள் அரசியல் அமைப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு ஆதரவளிப்பதன்மூலம் ஜனநாயகத்தில் பங்களிக்க வேண்டும், அதனால்தான், அந்த விருப்பமான கட்சியை தேர்ந்தெடுத்தபின் அந்த அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகளை கேள்வி கேட்க வேண்டும்” என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.