இரும்பு தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ. 3 கோடி இழப்பு

0
1

புதுச்சேரி அருகேயுள்ள சேதராப்பட்டு எல் அண்ட் டி இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி, தமிழக தீயணைப்பு நிலையங்களில் இருந்து 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி அணைத்தன.

புதுச்சேரி சேதராப்பட்டில் அணுமின் நிலையத்துக்கு தேவையான உயர்மின் கோபுரங்கள், கட்டுமானத் துறைக்கு தேவையான இரும்பு ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இரண்டு யூனிட்டுகள் இங்கு இயங்குகின்றன.

ஒரு யூனிட்டில் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு, மற்றொரு யூனிட்டில் பெயின்ட் அடிக்கும் பணி நடக்கும். பெயின்ட் அடிக்கும் யூனிட்டில் பெயின்ட் பெரிய கண்டெய்னரில் இருக்கும். அங்கு பெயின்ட் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.

மாலையில் தீ பிடித்து எரிந்ததால் பணியாளர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டனர்.

புதுச்சேரி, தமிழகப்பகுதிகளில் உள்ள வானூர், சேதராப்பட்டு, புதுச்சேரி, வில்லியனூர், தட்டாஞ்சாவடி, கோட்டக்குப்பம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முற்பட்டன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

எஸ்பி ரச்சனாசிங் நேரடியாக சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார். ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.