‘இந்த’ ஹீரோயினை வைத்து படமெடுத்தால் செலவு மிச்சமாகும்…! ஆர்ஜே பாலாஜி தரும் ஐடியா! | RJ Balaji’s idea to reduce production cost!

0
0

சென்னை: மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜாவை வைத்து படம் இயக்கினால் செலவு மிச்சம் என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடித்துள்ள திரைப்படம் பூமரங். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் ஆர்யா, இப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் பற்றி கூறும்போது, அர்ஜுன் ரெட்டி திரைப்பட இசையமைப்பாளர் என்பதால் அவர் ஆந்திராவிலிருந்து வந்தவர் என நினைத்ததாகவும், ஆனால் அவர் கேகே நகரில் பிறந்து வளர்ந்தவர் என்பது பிறகுதான் தெரியும் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்ஜே.பாலாஜி, “இப்போதெல்லாம் நடிகர்கள் ஏன் அதிகமாக கருத்து சொல்கிறார்கள் எனக் கேட்கிறார்கள். கருத்து சொல்லாமல் இருக்குமளவுக்கு பாதுகாப்பான சமூகத்தில் நாம் இல்லை” எனக் கூறி சமீபத்தில் சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை நினைவு கூர்ந்தார்.

படத்தின் நடிகைகள் பற்றி பேசும்போது, “இப்படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா இருவருமே தமிழ் தெரிந்தவர்கள். நன்றாக நடிக்கிறார்கள். வட இந்தியாவிலிருந்து நடிகையைக் கூட்டி வந்து கஷ்டப்பட்டு படம்மெடுப்பதை விட, இதுபோன்ற தமிழ்தெரிந்த நடிகைகளை பயன்படுத்தினால் தயாரிப்பாளருக்கு செலவு குறையும்” எனக் குறிப்பிட்டார்.

இப்படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், உப்பன் படேல், சுகாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரதன் இசையமைத்துள்ளார்.