இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம்

0
0

இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையை, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ தட்டிச்செல்ல இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘மெர்சல்’ என இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களின் ஆல்பமும் சூப்பர் ஹிட்டான நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ‘காற்று வெளியிடை’ படத்துக்காகப் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக சாஷா திருப்பதிக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் எந்தப் படமும் ரிலீஸாகாத நிலையில், ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சர்கார்’ மற்றும் ‘2.0’, ‘சர்வம் தாளமயம்’ என நான்கு தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28-ம் தேதியும், ‘சர்கார்’ தீபாவளிக்கும், ‘2.0’ நவம்பர் 29-ம் தேதியும் வெளியாக உள்ளன.

எனவே, இந்த வருடம் வெளியாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெயரை ‘செக்கச்சிவந்த வானம்’ தட்டிச்செல்ல இருக்கிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், அப்பாணி சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரஹ்மானுக்கு இந்த வருடத்தில் இதுவரை மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற ஒரே ஒரு இந்திப் படம் மட்டுமே ரிலீஸாகியிருக்கிறது. மேற்கண்ட 4 தமிழ்ப் படங்கள் தவிர ‘லீ முஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்துக்கும், ‘99 சாங்ஸ்’ என்ற இந்திப் படத்துக்கும், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்துக்கும் இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.