இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 404 வீடுகள்: இலங்கை மலையகத் தமிழர்களிடம் மோடி ஒப்படைத்தார்

0
0

இலங்கையில் மலையகத் தோட்டத் தமிழர்களுக்கு இந்திய அரசின் சார்பாக கட்டப்பட்ட 404 வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது. இவற்றில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டன. மேலும் 4 ஆயிரம் வீடுகள் தேயிலைத் தோட்டத் தமிழர்கள் அதிகம் வாழும் மலையகப் பகுதிகளில் கட்டுவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்த வீடுகளை கட்டுவதற்கான நிலங்களை அடையாளம் காணும் பணிகள் மலையகப் பகுதிகளான கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு நடைபெற்று வந்தன.

இலங்கை மலையக மக்களுக்கு 10,000 வீடுகள்

இந்நிலையில் இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பிரதமர் மோடி, ”மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என அறிவித்தார்.

மலையக தோட்டத் தமிழர்களுக்கு இந்திய நிதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைக்கும் ரணில் விக்ரமசிங்கே.

 

இந்நிலையில் இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டுலோயா நகரத்தின் டன்சின் தோட்டத்தில் மகாத்மா காந்திபுரம் என்கிற பெயரில் 404 வீடுகள் இந்திய நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டன.

இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்த வீடுகளை மலையகத் தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள பூண்டுலோயா டன்சின் தோட்டம் மகாத்மா காந்திபுரத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடைபெற்றது. இலங்கைக்கான இந்தியத் தூதர் இந்திய தரஜித் சிங் சந்து, அந்நாட்டு அமைச்சர்கள் பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட நவீன் திசாநாயக்க, ரவூப் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் டில்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

காணொலிக் காட்சி மூலம் பேசிய மோடி.

 

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ”இந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட வீடுகளில் இதுவரையிலும் 47,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. மலையகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளில் பயனாளிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றவதை அறிந்து மகிழ்வுற்றேன். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

நான் கடந்த ஆண்டு மலையகத் தமிழர்களுக்கு அறிவித்த மேலும் 10 ஆயிரம் கட்டுவதற்கான உடன்படிக்கையில் இன்று இந்தியாவும் இலங்கையும் கையோப்பமிட்டுள்ளன. இலங்கை தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தயாராக உள்ளோம்” என்றார்.