இந்தியா தோற்றதற்கு கோலிதான் பொறுப்பேற்க வேண்டும்: நாசர் ஹுசைன் அதிரடி

0
0

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோலி, அஸ்வின், இசாந்த் சர்மா ஆகியோர் உயர்தரமாக ஆடி வெற்றிக்கு நெருங்கி வந்து தோற்றுள்ள நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கோலியைப் புகழ்ந்து கூறினாலும் கேப்டன்சியில் கோலி சோடைபோனதற்காக இந்திய தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸில் நாசர் ஹுசைன் கூறியதாவது:

இந்தப் போட்டியில் கோலி ஒரு பிரமாதமான ஆட்டத்தை ஆடினார், அதனால் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். டெய்ல் எண்டர்களுடன் ஆடி இந்திய அணியை டெஸ்ட் மேட்சிற்குள் கொண்டு வந்தார்.

ஆனால் அதே வேளையில் தோல்விக்கு அவர் பொறுப்பும் ஏற்க வேண்டும், காரணம் இங்கிலாந்து 87/7. கரனும் ஆதில் ரஷீத்தும் உள்ளனர் ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு மணி நேரம் ஆட்டத்தில் காணவில்லை.

இந்தியா அப்போது கட்டுப்பாட்டை இழந்தது. எனவே கோலி தன் கேப்டன்சி குறித்து திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும். இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வினின் சராசரி 19. சாம் கரன் என்ற 20 வயது இளம் இடது கை வீரர் கிரீசில் இருக்கிறார், அவரை ஏன் பவுலிங்கிலிருந்து அகற்ற வேண்டும்?

இவ்வாறு கேள்வி எழுப்பினார் நாசர் ஹுசைன்.