இந்தியாவில் சில மொழிகள் அழிவது வேதனை அளிக்கிறது: தாய்மொழியை காக்க இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

0
0

இந்தியாவில் சில மொழிகள் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இளைஞர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து வருகின்றனர். இதைத் தடுக்க ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

வெங்கய்ய நாயுடு நேற்று காலை சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு வெங்கைய்ய நாயுடு சென்றார்.

பின்னர் ஜவஹர்லால் நேரு கலையரங்கில் மாணவ – மாணவிகள், பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:

ஒரே உலகம் ஒரே குடும்பம்

‘ஒரே உலகம் ஒரே குடும்பம்’ அதுவே நம் நாட்டின் பாரம்பரியம். பிரதமரின் விருப்பப்படி நாட்டில் தரமான சீர்த்திருத்தங்கள் மூலம் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

நமது நாட்டில் 65 சதவீத மக்கள் 35வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். ‘இந்தியர்’ என்பதில் இளைஞர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். புதிய திறமைகளையும் அறிவுத் திறனையும் இளைஞர்கள் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தியாவை உலகமே கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திலுள்ள நாடாக மாற வாய்ப்புகள் உள்ளன. இளைஞர்கள் அனைவரும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தரமான வாழ்வை வாழ்வதற்கான சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

‘கல்வி’ என்பது வேலைக்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தங்கள் கனவையும் குறிக்கோளையும் பெரிதாக எண்ணுங்கள். படிப்பதை சிரமமாக கொள்ளாமல் மகிழ்வுடன் படியுங்கள். கல்வி கற்பிக்கும் முறை எளிதாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் விரும்பி படிப்பார்கள். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள். ‘சம்பாதிக்க வேண்டும்’ என்றே ஓடிக்கொண்டு இருக்காதீர்கள்.

தாய்மொழியை தவிர்க்காதீர்

இந்தியாவில் சில மொழிகள் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இதைத் தடுக்க ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியைப் பேச வேண்டும்.

வீட்டில் அனைவரும் தாய் மொழியில் பேசுங்கள். உங்கள் தாய்மொழியைப் புரிந்துகொள் ளும் இடங்களில் தாய்மொழியையே பேசுங்கள். வெளிநாடு சென்ற இளைஞர்கள் தங்களது தாய்மொழியை மறந்து வருகின்றனர். ‘அம்மா, அப்பா’ என தாய்மொழியிலேயே அழையுங்கள்.

வாழ்க்கையில் தாய்-தந்தை, பிறந்த மண், தாய்மொழி, தாய்நாடு, குரு ஆகிய இந்த ஐந்தும் மிக முக்கியமானவை.

வாழ்வை வீணடிக்காதீர்கள்

இந்திய பல்கலைக்கழகங்களில் ஒருநாள் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் உட்பட அனைத்து படிப்புகளையும் அந்தந்த தாய்மொழியில் கற்று தர வேண்டும் என்பது என் விருப்பம். இந்தியாவில் தாய்மொழியில் அனைத்து பாடங்களும் வர வேண்டும்.

உங்கள் எண்ணம் நிறைவேறும் வரை கடுமையாக உழையுங்கள். கற்கும் நேரங்களை தவிர சமூகத்தை பற்றி அறிந்துகொள்ள நேரத்தை செலவிடுங்கள்.

கிடைக்கும் நேரங்களில் கிராமப்புறங்கள் சென்று கல்வி கற்பியுங்கள். ‘தூய்மை இந்தியா’வை உருவாக்குவதற்கு எண்ணுங்கள்.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் பேசினார்.