இந்தியாவின் 2-வது திருநங்கை வழக்கறிஞரானார் விஜி: தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு

0
0

இந்தியாவின் 2-வது திருநங்கை வழக்கறிஞராக தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.விஜி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் வழக்கறிஞராகி நேற்று தூத்துக்குடி திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் எஸ்.விஜி(38). திருநங்கையான இவர், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ‘அன்பு அறக்கட்டளை’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் தென்மண்டல பிரதிநிதியாகப் பணியாற்றினார். கடந்த 2012-ம் ஆண்டு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ராஜீவ் காந்தி சட்டக் கல்லூரியில் சேர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் சட்டம் பயின்று முடித்தார். ஆனால், பார் கவுன்சிலில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின்னர் நேற்று முன்தினம் (ஜூலை 7) இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அதன் பிறகு ரயில் மூலம் விஜி நேற்று தூத்துக்குடி வந்தார். ரயில் நிலையத்தில் சக திருநங்கைகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழிகாட்டுதல் இல்லை

அப்போது விஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்து தான் தற்போது வழக்கறிஞராகி இருக்கிறேன். திருநங்கைகள் என்றால் சமுதாயத்தில் ஒரு விதமான கெட்ட பெயர் இருக்கிறது. அதனை மாற்ற நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலில்தான் சட்டம் படிக்க ஆரம்பித்தேன். 2012-ல் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தில் முதன்முதலாக என்னை உறுப்பினராக சேர்த்தார்கள். அதுதான் முதல் உந்துதல். அப்போது லோக் அதாலத் தலைவராக இருந்த குருவையாதான் சட்டம் படிக்க என்னை தூண்டினார்.

எங்களை போன்றவர்கள் படிக்கிறார்கள் என்றால், தகுந்த வழிகாட்டுதலை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அந்த மாதிரி வழிகாட்டுதல் இல்லாததால்தான், நான் படித்து முடித்து ஓராண்டு ஆகியும் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

உந்துதலாக இருப்பேன்

இந்த மாதிரி தடைகள் வரும்போது மனது சோர்வாகிவிடுகிறது. அடுத்து வருபவர்களுக்காவது அரசு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். என்னை போன்ற திருநங்கைகளுக்கு உந்துதலாக இருக்க விரும்புகிறேன்.

நிறைய பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க வேண்டும். சமூகம் சார்ந்த பணிகளில் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். சமூகம் என்னை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, சமுதாயத்தை நான் நேசிப்பேன் என்றார் அவர்.