இந்தியாவின் ஆட்டத்தைப் பார்க்காமல் ‘தூங்கிய ரவி சாஸ்திரி’: ஹர்பஜன் எழுப்பியபோது ‘தியானம்’ செய்வதாக மழுப்பல்

0
0

 

இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்காமல் தூங்கிய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை வர்ணனை மூலம் ஹர்பஜன் எழுப்பியபோது, நான் தியானம் செய்வதாக கூறி அவர் மழுப்பினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி பர்மிங்ஹாம் நகரில் நடந்து வருகிறது.

முதல் நாளான நேற்று உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சு, பீல்டிங்கில் உத்வேகம் காணப்பட்டது, அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதனால், ஆட்டம் பரபரப்பானது. ஆனால், இதைப் பார்க்காமல் பெவிலியனில் அமர்ந்து கொண்டு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அமர்ந்தவாறே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகே துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அமர்ந்திருந்தார்.

, வர்ணனையாளர் அறையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்டுடன் ஹர்பஜன் சிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தூங்குவதை கேமரா மூலம் பார்த்த ஹர்பஜன் சிங் பார்த்து சிரித்து, கிண்டல் செய்தார்.

சஞ்சய் பங்கரை அழைத்த ஹர்பஜன் சிங், “ ரவி சாஸ்திரியின் கன்னத்தைப் பிடித்து இழுத்து உலுக்கி, தூக்கத்தில் இருந்து எழுப்புங்கள்” என்று ஹர்பஜன் கிண்டல் செய்தார். இதைக் கேட்ட சஞ்சய் பங்கர் தன்னிடம் இருந்த இயர்போனை ரவி சாஸ்திரியிடம் கொடுத்து கேட்கக் கூறினார். அவரிடம் “ரவி எழுந்திருங்கள், தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள்” என ஹர்பஜன் தெரிவித்தார்.

இதைக் கேட்டு சிரித்த ரவி சாஸ்திரி, “நான் தூங்கவில்லை, நான் சிறிது நேரம் அமர்ந்தவாறே தியானம் செய்து கொண்டிருந்தேன்” என்று கூற அங்கு ஒரே சிரிப்பலை நிலவியது.