இதே வீரர்கள்தான் நம் அணியை நம்பர் 1 இடத்துக்கு உயர்த்தினர்; உள்நாட்டில் ஓராண்டு ஆடிவிட்டு நம்பர் 1 இடத்துக்கு தகுதியா? – ரோஹித் சர்மாவுக்கு நெட்டிசன்கள் பதிலடி

0
0

நடைபெற்று வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்விங் பவுலிங்கிற்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்குச் சுருண்டதையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் இந்திய பேட்ச்மென்கள் மீதான கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “இதே வீரர்கள்தான் அணியை நம்பர் 1 இடத்துக்கு இட்டுச் சென்றனர் என்பதை நாம் மறக்க வேண்டாம். கடினமான காலத்தில் நாம் ஆதரவு அளிக்க வேண்டாமா? என்ன இருந்தாலும் இது நம் அணி” என்று பதிவிட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட சிலர் மட்டும் ஆதரவு தெரிவிக்க, மற்ற நெட்டிசன்கள் ரோஹித் சர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்

அனுபம் என்பவர், “நீங்கள் உட்பட இதே வீர்ர்கள்தான் தொடர்ந்து அயல்நாடுகளில் சொதப்பி வருகிறீர்கள். நம்பர் 1 நிலைக்கு வந்ததற்கு நம் உள்நாட்டு பிட்ச்களே காரணம்” சாடியுள்ளார்.

அதே போல் ஆதேஷ் என்பவர், “உள்நாட்டில் ஓராண்டு ஆடிவிட்டு நம்பர் 1 இடத்தைப் பிடித்தோம். வெளியில் வென்றால்தான் நம்பர் 1 இடத்துக்கு தகுதி. வசதியான இடத்திலிருந்து விலகி வெற்றி பெற்றால்தான் நம்பர் 1” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் காட்டத்தைக் கொஞ்சம் குறைத்து, “இது ஆதரவு பற்றிய விஷயம் அல்ல. எப்போதும் டீம் இந்தியாவைத்தான் ஆதரிப்போம். ஆனால் ரசிகர்களாக வெளிநாட்டு பிட்ச்களில் நீங்கள் நன்றாக ஆடுவதையும் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மற்றவர்கள் வெளிநாட்டில் எப்போதுதான் வெல்வோம், ஓராண்டு உள்நாட்டில் ஆடிவிட்டு நம்பர் 1 என்று பெருமை கொள்ளலாமா என்று ரோஹித் சர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.