இது ‘ரொனால்டோ ஸ்டைல்’: சதமடித்தபின் கோலியுடன் கொண்டாடிய கே.எல்.ராகுல்: வைரலாகும் புகைப்படம்

0
0

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் கே.எல் ராகுல், கேப்டன் விராட் கோலியுடன் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடிய விதம் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி ஓல்டு டிராபோர்டு நகரில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.

160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய கே.எல் ராகுல் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்திய வீரர் கே.எல். ராகுல் சதம் அடித்தவுடன், கேப்டன் விராட்கோலியுடன் தனது மகிழ்ச்சியை வித்தியாசமாகப் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவை பிசிசிஐ அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவிடம், சகவீரர்கள் கோல் அடித்துவிட்டால், எவ்வாறு வணக்கம் கூறுவார்களோ அதுபோல் கோலிக்கு, ராகுல் வணக்கம் கூறினார். இதைத் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

அதன்பின் இந்தப் போட்டி முடிந்தபின், தினேஷ் கார்த்திக்கும், கேஎல் ராகுலும் பேசும் ஒரு வீடியோவை பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.அதில் ராகுல் கூறுகையில், ‘‘நமது கேப்டன் விராட் கோலி, போர்ச்சுக்கல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோவின் தீவிரமான ரசிகர். நான் சதமடித்தவுடன், ரொனால்டாவுக்கு அவரின் வீரர்கள் எவ்வாறு கைகொடுத்து வணக்கம் செலுத்துவார்களோ அதுபோல் கோலியிடம் தெரிவித்தேன் கோலியும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஏற்கெனவே ஹர்திக் பாண்டயாவிடம் வேறுமுறையில் வணக்கம் செலுத்தி இருக்கிறேன். இந்தத் தொடர் முடிவதற்குள் ஒவ்வொரு வீரரிடம் ஒவ்வொருவிதமாகக் கைகொடுத்து வணக்கம் செலுத்தப்போகிறேன். ஹர்திக் பாண்டியா, கோலியிடம் கைகொடுத்ததை நீங்கள் பார்த்துவிட்டார்கள். அடுத்தடுத்த போட்டிகளில் வித்தியாசத்தைக் காணுங்கள்’’ எனத் தெரிவித்தார்.

ராகுல் சதம் அடித்தபின், களத்தில் விராட் கோலிக்கு வித்தியாசமாகக் கைகொடுத்து வணக்கம் செலுத்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது