இடுக்கி அணை திறப்பால் வெள்ளத்தில் மிதக்கும் கொச்சி: எதிர்கட்சித் தலைவர்களுடன் சென்று பார்வையிட்ட கேரள முதல்வர்

0
0

கேரளாவில் இடுக்கி அணை திறக்கப்பட்டு அதிகஅளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கொச்சி முழுவதும் வெள்ளத்தால் மிதக்கிறது. வெள்ள சேதப்பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவருடன் சென்ற பார்வையிட்டார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள ஆலுவா நகரம்

இடுக்கி, எடமலையார் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரியாறு வழியாக வந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. கடும் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால் கொச்சி நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கடும் மழை காரணமாக இடுக்கி, பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸைச் சேர்ந்தஎதிர்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலாவுடன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகளும் சென்றுள்ளனர். இடுக்கி மட்டுமின்றி பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் இன்று பார்வையிடுகின்றனர்.

இடுக்கி அணையில் இருந்து பாய்ந்தோடி வரும் தண்ணீர்