இசாந்த் சர்மாவின் ஒரே ஓவரில் 3 விக்கெட்; அஸ்வின் அசத்தல்: இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்

0
0

அஸ்வின், இசாந்த் சர்மா ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

காலை நேரத் தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து மதிய உணவு இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்ததது. அதிலும் அஸ்வினுடைய குழப்பமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் ரன் சேர்க்கத் திணறி வருகின்றனர். இசாந்த் சர்மா வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தணறியது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் அற்புதமான சதத்தால்(149 ரன்கள்) 274 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 13 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் சேர்த்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகியது போன்று, 2-வது இன்னிங்கிலும் சிறிதுகூட மாற்றமில்லாமல் அதே பந்துவீச்சில் படம் காட்டி போல்டாக்கினார் அஸ்வின்.

இன்று மூன்றாவது நாள் தொடங்கி நடந்து வருகிறது. ஜென்னிங்ஸ், கேப்டன் ரூட் களமிறங்கினார்கள். 2-வது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று தொடக்கத்திலேயே கணிக்கப்பட்டது போன்று ஆடுகளம் அஸ்வினுடைய சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது.

அஸ்வின் வீசிய 7-வது ஓவரில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஜென்னிங்ஸ் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்து டேவிட் மலான் களமிறங்கினார். ரூட், மலானும் நிதானமாக பேட் செய்தாலும், ரன்களைச் சேர்க்க மிகவும் சிரமப்பட்டனர்.

 

16-வது ஓவரில் ரூட் விக்கெட்டைப் பெற்றார் அஸ்வின். லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் பெவிலியின் திரும்பினார் ரூட். அதன்பின் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

மலானும், பேர்ஸ்டோவும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் கட்டுக்கோப்பாக விளையாடினர். இந்த நெருக்கடியைப் பயன்படுத்தும் வகையில் இசாந்த் சர்மா பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் ஸ்விங் பந்துவீச்சு நன்றாக எடுபட்டது.

இசாந்த் சர்மா வீசிய 27-வது ஓவரில் கல்லி பாயின்டில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து, மலான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், இசாந்த் சர்மா வீசிய 31-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

31-வது ஓவரின் 2-வது பந்தில் பேர்ஸ்டோ 28 ரன்கள் சேர்த்திருந்தபோது, முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த தவணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பட்லர் ஒரு ரன் எடுத்துவிட்டு, ஸ்டோக்ஸிடம் கொடுத்தார். 3-வது பந்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் 6 ரன்கள் சேர்த்த நிலையில், 3-வது ஸ்லிப்பில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் உணவு இடைவேளை விடப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மீதமிருந்த இரு பந்துகளை இசாந்த் சர்மா வீசினார். இதில் 5-வது பந்தைச் சந்தித்த குரன் ஒரு ரன் அடித்து பட்லரிடம் கொடுத்தார்.

கடைசிப் பந்தைச் சந்தித்த பட்லர் ஒரு ரன் சேர்த்த நிலையில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், இங்கிலாந்து அணி பெரிய சரிவைச் சந்தித்தது.

ஷாம் கரன் 13 ரன்களிலும், ஆதில் ராஷித் 4 ரன்களிலும் களத்தில் ஆடி வருகின்றனர். 36 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களுடன் இங்கிலாந்து பேட் செய்து வருகிறது. 116 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.