இங்கிலாந்து 2-வது டி20 ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி- கார்டிப்பில் இன்று நடைபெறுகிறது

0
0

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று கார்டிப் நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இன்று 2-வது டி20 ஆட்டம் கார்டிப் நகரில் நடைபெறவுள்ளது.

முதல் ஆட்டத்தில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது. குல்தீப் யாதவின் மிரட்டலான பந்துவீச்சு, இங்கிலாந்து வீரர்களை ஆட்டம் காணச் செய்தது. அவர் 5 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து மீள முடியாமல் போய்விட்டது. எனவே இந்த ஆட்டத்திலும் குல்தீப் யாதவ் தனது சுழல்பந்துகளை சுழற்றி இங்கிலாந்தை மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

அதுபோலவே யுவேந்திர சாஹல், புவனேஸ்வர்குமார், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

பேட்டிங்கில் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுலிடமிருந்து மற்றுமொரு சிறந்த பேட்டிங்கை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கேப்டன் விராட் கோலி, எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா என இந்தியாவின் பேட்டிங் வலுவாக உள்ளது. எனவே இந்த ஆட்டத் தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பழிவாங்கும் விதத்தில் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது.

கேப்டன் இயன் மோர்கன், ஜோ ரூட், ஜேசன் ராய், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜாஸ் பட்லர், சாம் குர்ரன் ஆகியோர் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கின்றனர். முதல் ஆட்டத்தில் பட்லர் மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்றவர்கள் சரியாக விளையாடவில்லை. எனவே இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி காண்பதில் இங்கிலாந்து அணி மும்முரமாக உள்ளது. பவுலிங்கில் தாவித் மலன், ஆதில் ரஷீத், லியாம் பிளெங்கெட் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை இந்த ஆட்டத்தில் சரியாகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அணி விவரம்: இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கிருணல் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் ஷகார், ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: இயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜாஸ் பட்லர், சாம் குர்ரன், ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், பிளெங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, டேவிட் மலன்.