ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

0
0

ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூரலும், குளிர்ந்த சூழலும் நிலவி வருகிறது

வழக்க மாக தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும். வட கிழக்கு பருவமழை காலங்களில் மட்டும்தான் அதிகாலை நேரங் களில் மழை பெய்யத் தொடங்கும். தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகாலை நேரத்தில் மழை பெய்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

ஆந்திர கடலோரப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. தற்போது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி யில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.

இந்த வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூரல் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் விட்டுவிட்டு மிதமான அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம், கோவை மாவட்டம் வால்பாறை, தேனி மாவட்டம் பெரியார், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்களம் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.