ஆண்டுக்கு இருமுறை நீட்; மனித வள மேம்பாட்டுத் துறை கார்ப்பரேட் வள மேம்பாட்டுத் துறையாக மாற்றப்பட்டுவிட்டதா?-வேல்முருகன் கண்டனம்

0
0

நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்ற அறிவிப்பு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பலன் தரும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நுழைவுத் தேர்வுகள் கல்வி வாய்ப்பை மறுக்கிறது. அதனால்தான் நுழைவுத் தேர்வுகள் வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தமிழக மக்கள் உயர்கல்வி பயிலக் கூடாது என்று நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவந்தது. ஆனால் தமிழக அரசின் உயர்கல்வி நிலையங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்து கல்வியில் புரட்சியை நிகழ்த்தியது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. இப்படி தீய உள்நோக்கத்தில் புகுத்தப்பட்ட நீட் தேர்வு தீமையானதாகவே இருக்கிறது; இரண்டாண்டு நீட் தேர்வுகள் கணிசமான தமிழக மாணவர்களை மருத்துவம் படிக்கவிடாமல் செய்துவிட்டன. இப்போது நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

சிபிஎஸ்இ அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நடத்தாது. நீட், ஜேஇஇ, யுஜிசி நெட், சிமேட் தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமைதான் இனி நடத்தும். இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் கணினி முறையில் நடத்தப்படும். அத்துடன் 2019 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களிலும் நடைபெறும். தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இப்படி ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வை நடத்துவது மற்ற தேர்வுகளுக்கும் மாணவர்களைப் படிக்கவிடாமல் செய்து எதிலும் தேர்ச்சி பெறாமல் அவர்களின் படிப்பையே பாழாக்குவதாகும். மேலும், இரண்டு முறை நீட் பயிற்சிக்காக கட்டணம் செலுத்த வேண்டும்; இதற்கு வசதியில்லாத மாணவர்கள் நீட் தேர்வு எழுதாத நிலை ஏற்படும்.

இதனால், பாஜகவின் நோக்கம் இரண்டு வகைகளிலும் வெற்றி பெறும்; தமிழக மாணவர்களை உயர்கல்வியிலிருந்தே அப்புறப்படுத்த முடியும் மற்றும் கார்ப்பரேட்டுகளை மேலும் வளப்படுத்த முடியும். கல்வித் தரம் என்பதெல்லாம் இல்லை; கார்ப்பரேட்டுகள் பலன் பெறத்தான் நீட் மற்றும் அதன் பயிற்சி மையங்கள் என்பதுதான் நடைமுறை உண்மையாக உள்ளது.

அதனால்தான் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கார்ப்பரேட் வள மேம்பாட்டுத் துறையாக மாற்றப்பட்டுவிட்டதா என்று கேள்வி எழுகிறது. இல்லாவிட்டால் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் இனி ஆண்டில் இரண்டு முறை ஏன் நடத்தப்பட வேண்டும்? சமூக நீதி, சம வாய்ப்பு மற்றும் மாநில உரிமைக்கே எதிரான எந்த நுழைவுத் தேர்வும் தேவையில்லை என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

எனவே, இனியும் தயங்காமல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் பெறுவதுடன், கல்வியைப் பழையபடி மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.