ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மையால் தூர்ந்த வரத்து வாய்க்கால்களால் டெல்டாவில் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புவது தாமதம்: காவிரியில் தண்ணீர் வந்தும் பயனில்லை

0
0

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக் கப்பட்ட நிலையிலும் காவிரிக் கரையோர மாவட்டங்களில் உள்ள வரத்து வாய்க்கால்களில் போதியபராமரிப்புப் பணி மேற்கொள்ளப் படாததால் ஏரி, குளங்கள் உள் ளிட்டவற்றில் தண்ணீர் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால், அம்மாநில அணைகள் நிரம்பியதையடுத்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து கடந்த ஜூலை 19-ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் காவிரியின் முழுக்கொள்ளளவைத் தாண்டி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. காவிரிக் கரையோர மாவட் டங்கள் பலவற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

நிரம்பாத ஏரி, குளங்கள்

கடந்த 10 நாட்களாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையிலும் கரையோர மாவட் டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை.

சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் இன்னும் தயாராகாத நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு அனைத்து ஆறுகள், வாய்க்கால் கள் வழியாக ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான நடவடிக்கைகளைப் பொதுப்பணித் துறையினர் மேற் கொண்டாலும், வரத்து வாய்க்கால் களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிர மிப்புகள் மற்றும் பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்மை ஆகிய வற்றால் தண்ணீரை திட்டமிட்டபடி கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக உள்ளது.

தற்போதுள்ள சூழலில் தண்ணீர் வந்து 10 தினங்களுக்குள்ளாக அனைத்து ஏரிகள், குளங்கள் ஆகியவை நிரம்பிவிடும் என எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

முறையாக பராமரிக்கவில்லை

இதுகுறித்து அய்யன் வாய்க் கால் பாசனதாரர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.வீரசேக ரன் கூறியதாவது:

‘‘கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் அனைத்து வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மேலும், அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாக அகற்றப்படவில்லை. வரத்து வாய்க்கால்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் தூர்ந்து கிடக்கின்றன. இதனால் முழு அளவு தண்ணீரை விடுவிப்பதிலும் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

தண்ணீர் இல்லாத காலங்களில் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து வாய்க்கால்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆண்டு தோறும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உரிய நிதியை அரசு பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கீடு செய்யாததுமே முக்கிய காரணம்’’ என்றார்.

கடைமடையில் மட்டுமே கவனம்

திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் கே.மாரிமுத்து கூறியதாவது:

‘‘பாமணி, கோரையாறு, வெண்ணாறு ஆகியவற்றில் கடைமடை வரை தண்ணீர் வந்துவிட்டது. தற்போது சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் தேவையில்லாத நிலையில், வரும் தண்ணீரை கடலில் கலக்க விடாமல் நீர்நிலைகளை நிரப்பலாம். இதையே அரசும் வலியுறுத்தியது. ஆனால், வாய்க்கால்களில் தண்ணீரை கொண்டு சென்று நீர்நிலைகளை நிரப்புவதில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. கடைமடைக்கு தண்ணீர் சேருகிறதா என்பதை மட்டுமே அவர்கள் பார்க்கின்றனர். வாய்க்கால்களை முறையாக பராமரிக்காததால் காவிரியில் தண்ணீர் வந்தும் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை’’ என்றார்.கும்பகோணத்தில் உள்ள ஆதிவராக பெருமாள் கோயில் குளத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.

ஏரி, குளங்களின் நிலை என்ன?

திருச்சி மாவட்டத்தில் 88 கிலோ மீட்டர் தொலைவுள்ள உய்யக்கொண்டான் கால்வாயில் 47 கிலோ மீட்டரும், 134 கிலோ மீட்டர் தொலைவுள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 88 கிலோ மீட்டரும் தண்ணீர் சென்று சேர்ந்துள்ளது. 50 சதவீத நீர்நிலைகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் உள்ள ஒரு சில குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வாய்க்கால்களிலிருந்து குளங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள இரு ஏரிகளில் பெருந்தோட்டம் ஏரிக்கு  தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 26 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. 4,800 குளங்களில் ஏறத்தாழ 2,400 குளங்களுக்கு 25 சதவீதம் அளவுக்கே தண்ணீர் சென்றுள்ளது.