ஆகஸ்ட் 17-ம் தேதி ட்ரெய்லர்; செப். 13-ம் தேதி பட வெளியீடு: ‘யு-டர்ன்’ படக்குழு முடிவு

0
0

ஆகஸ்ட் 17-ம் தேதி ட்ரெய்லர் வெளியீட்டையும், செப்டம்பர் 13-ம் தேதி பட வெளியீட்டையும் உறுதிப்படுத்தியிருக்கிறது ‘யு-டர்ன்’ படக்குழு.

கன்னடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘யு-டர்ன்’ படத்திற்கு விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இரண்டு மொழிகளிலும் பவண்குமார் இயக்கியுள்ளார். சமந்தா, ஆதி, பூமிகா, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ‘யு-டர்ன்’ என்ற பெயரிலேயே தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதியும், செப்டம்பர் 13-ம் தேதி படமும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘சீமராஜா’ படமும் செப்டம்பர் 13-ம் தேதி வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள். இதனால், ஒரே நாளில் இரண்டு சமந்தா படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.