அஸ்வின், ஷமி அசத்தல்: இங்கிலாந்தை 287 ரன்களில் சுருட்டியது இந்தியா

0
0

 

பர்மிங்ஹாமில் நடந்து முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், முகமது ஷமியின் திறமையான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அபாரமாகப் பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார்.

முதல் நாள் ஆட்டமான நேற்று இந்தியாவின் உமேஷ் யாதவின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால், அஸ்வினும், முகமது ஷமியும் அபாரமாகப் பந்துவீசினார்கள். முதல்நாள் ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டு இழப்புக்கு 285 ரன்கள் குவித்திருந்தது. களத்தில் சாம் கரன் 24 ரன்களுடனும், ஆன்டர்ஸன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சாம் கரன், ஆன்டர்சன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.

வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் ஓவரை அஸ்வினை வீசச் செய்து, கேப்டன் விராட் கோலி துணிச்சலான முடிவை எடுத்தார். ஆனால், அதற்கேற்றார்போல் போல் முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே ஆன்டர்ஸன் அடித்தார்.

2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். சாம் கரன் தான் சந்தித்த 4-வது பந்தில், தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துக் கூடுதலாக ரன் ஏதும் சேர்க்காமல், நேற்று சேர்த்த 24 ரன்களோடு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 89.4 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ், இசாந்த் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.