“அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்” – சூர்யாவைப் புகழ்ந்த செல்வராகவன்

0
0

‘அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்’ என சூர்யாவைப் புகழ்ந்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே’. ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. படத்தில் சூர்யாவின் பெயர் இது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் சூர்யா ஜோடியாக நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல். இந்தப் படத்தை எடிட் செய்கிறார்.

வருகிற தீபாவளி விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இறுதிக்கட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யாவைப் புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

அதில், “நான் எப்போது வேண்டுமானாலும் மறுபடியும் ஒரு நடிகருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால், அது சூர்யாவாகத்தான் இருக்கும். தன்னுடைய நடிப்பால் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். மிகக் கடுமையான அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்” எனத் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.