அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு; குற்றாலத்தில் குளிக்க அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

0
4

குற்றாலம் அருவிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. நீர் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சாரல் காலம் முன்கூட்டியே தொடங்கியது. கடந்த மே மாதம் 28-ம் தேதி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அதன் பிறகு சாரல் மழை இல்லாததால் அருவிகளில் நீர் வரத்து குறைந்தது. இந்நிலையில், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சாரல் மீண்டும் களைகட்டியது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. தொடர் மழையால் அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக சாரல் மழை ஏமாற்றம் அளித்தது. இதனால், அருவிகளில் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்தது. ஐந்தருவியில் நேற்று 3 கிளைகளில் மட்டும் மிகவும் குறைவாக தண்ணீர் விழுந்தது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதனால், அருவிகளில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.