அரசு, தனியாரின் ஆக்கிரமிப்புகளால் சென்னையில் நீர்நிலைகள் எண்ணிக்கை 250-ல் இருந்து 27 ஆக குறைந்தது: உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் வேதனை

0
0

அரசும், தனியாரும் ஏரி, குளங்களில் கட்டிடங்களைக் கட்டி ஆக்கிரமித்ததால், சென்னையில் நீர் நிலைகளின் எண்ணிக்கை 250-ல் இருந்து 27 ஆக குறைந்துவிட்டது என்று நூல் வெளியீட்டு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறினார். சி.பி.ராமசாமி அய்யர் அறக்கட்டளை யின் தலைவர் நந்திதா கிருஷ்ணா எழுதிய ‘ஹிந்துயிஸம் அண்ட் நேச்சர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் புத்தகத்தை வெளியிட்டு நீதிபதி பி.என். பிரகாஷ் பேசியதாவது:

பல்வேறு தகவல்களை உள்ளடக்கி, மிகவும் எளிமையான நடையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. முன்பு சென்னையில் மட்டும் சிறியதும்,பெரியதுமாக 250 நீர்நிலைகள் இருந்ததாக நந்திதா கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். இந்த எண்ணிக்கை தற் போது 27 ஆக குறைந்துவிட்டது.

முன்பு நீர்நிலைகளை மட்டுமே மக்கள் நம்பியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மக்களால் நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு வந்தபோது, அவை பாதுகாப்பாக இருந்தன. பிறகு, நீர்நிலைகள் மீது அரசும், தனியாரும் கட்டிடங்களைக் கட்டிவிட்டனர். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளைக் கட்டி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்த பிறகு, நீர் நிலைகளையும், அவற்றில் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுதான் நாம் செய்த தவறு. முன்பிருந்த நிலையே நீடித்திருந்தால் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு நடந் திருக்காது என்று பேசினார்.

விழாவில் அழகப்பா பல் கலைக்கழகத் துணைவேந்தர் என்.ராஜேந்திரன், சி.பி.ராமசாமி அய்யர் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் கிருஷ்ணா, சிபிஆர் இந்தியவியல் ஆராய்ச்சி மைய வரலாற்று ஆய்வுத் துறை தலைவர் ஜி.ஜே.சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.