அரசின் தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் சாலை விபத்து இறப்புகள் 20 சதவீதம் குறைவு: போக்குவரத்து துறை ஆணையர் சி.சமயமூர்த்தி தகவல்

0
0

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளுக்கு சிறிய பலன் கிடைத்துள்ளது. தமிழ்நாட் டில் தற்போது சாலை விபத்துகள் 2 சதவீதமும், உயிரிழப்புகள் 20 சதவீதமும் குறைந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 65,562 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 16,157 பேர் பலியாகி உள்ளனர். 74,572 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 50 சதவீத விபத்துகள் நெடுஞ்சாலைகளில் நடந்துள் ளன. அதிக வேகத்தில் வாக னத்தை ஓட்டுதல், சிவப்பு விளக்கை மதிக்காமல் தாண்டிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிக பாரம் ஏற்றுதல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல் போன் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்தல், அதிக விபத்துகள் நடக்கும் இடங்களை தேர்வு செய்து கட்டமைப்பு பணி களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் கடந்த 2 ஆண்டு களாக சாலை விபத்துகளும், இறப்புகளும் சிறிய அளவில் குறைந்துள்ளன. கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் நடந்துள்ள 33,026 சாலை விபத்து களில் 6,510 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 20 சதவீத உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர் சி.சமயமூர்த்தி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சாலை விபத்து மற்றும் இறப்புகளை குறைக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. சாலை பாதுகாப்பு நிதி மூலம் கட்ட மைப்புகளை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நட வடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். மேலும், சமூக வலைதளங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சாலை விபத்து ஏற்பட்ட அடுத்த 10 முதல் 15 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத் துவமனைகளிடையே தொடர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளோம். விபத்து ஏற்பட்டவுடனே காய மடைந்தவர்களை கொண்டு வரும்போதே, அவர்களின் நிலையை அறிந்து, உடனடியாக சிகிச்சை அளிக்க அருகே உள்ள மருத்துவமனைகளிலும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் நடத்தப் பட்ட ஆய்வுகளில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் சுமார் 300 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, வேகத்தடை அமைத்தல், தடுப்பு கள் அமைத்தல், சிவப்பு ஒளிர் பட்டைகள் அமைத்தல், தேவை யான இடங்களில் சிறிய மேம் பாலங்கள் அமைத்தல் போன்ற கட்டமைப்புகள் உருவாக்கப்பட் டுள்ளன. வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் முக்கிய சாலைகளில் ஆர்டிஓ அதிகாரிகள், போக்கு வரத்து போலீஸாருடன் இணைந்து வேக அளவீட்டு கருவிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இதற்கிடையே, போக்குவரத்து விதியை மீறியதாக கடந்த ஒன் றரை ஆண்டில் 2 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் 3 மாவட் டங்களை தேர்வு செய்து விருது அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு பணியை மேம்படுத்தும் வகையில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு கிளப் அமைத்து, தொடர்ந்து விழிப்புணர்வு பணியை மேற்கொள்ளவுள்ளது. அரசு மேற்கொண்ட தொடர் நட வடிக்கைகளால் சாலை விபத்து களில் ஏற்படும் உயிரிழப்பு 15 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது. இதுவே, அடுத்த 2 ஆண்டுகளில் 50 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.