அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டி முஸ்லிம்கள் நடத்த இருந்த சிறப்புத் தொழுகை கடைசி நேரத்தில் ரத்து

0
0

அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டி, முஸ்லிம்கள் அங்குள்ள சரயு நதிக்கரையில் சிறப்புத் தொழுகை நடத்த இருந்தனர். இதை அங்குள்ள சாதுக்கள் விரும்பாததால் அந்நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

உ.பி.யின் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்பதன் மீதான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனினும், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இந்துக்கள் தரப்பில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

பாஜக மத்திய ஆட்சியில் தலைமை ஏற்றது முதல் அதற்கு ஆதரவாக சில முஸ்லிம்களும் இருந்து வருகின்றனர். இவர்கள் தம் சொந்த லாபத்திற்காக இவ்வாறு செய்வதாகப் புகாரும் இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்த ஆதரவு முஸ்லிம் தரப்பினர் நேற்று அயோத்தியின் சரயு நதிக்கரையில் சிறப்பு தொழுகை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

சுமார் ஆயிரம் பேர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதில், ராமர் கோயில் கட்ட குர்ஆன் வாசிப்பும் நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சிக்கும் உ.பி. மாநில சிறுபான்மைத்துறை அமைச்சர் சவுத்ரி லஷ்மி நாராயண் தலைமை ஏற்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் அந்நிகழ்ச்சி திடீர் என ரத்து செய்யப்பட்டது.

இதனால், டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து நேரலை செய்ய வந்த தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு சற்று முன்பாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் உ.பி. தலைவர் அருண்குமார், இந்த தொழுகை நிகழ்ச்சியை நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது என்றும், இதை தமது அமைப்பு நடத்தவில்லை எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதை அடுத்து அயோத்தி-பைஸாபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடியாகச் செயலில் இறங்கியது. சரயு நதிக்கரையில் தொழுகை நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்றும், அதற்காக அங்கு எவரும் கூடக் கூடாது எனவும் தடை விதித்தது.

இது குறித்து ‘தமிழ் இந்து’ இணையதளத்திடம் உ.பி. மாநில ஆர்எஸ்எஸ் வட்டாரம் கூறும்போது, ”இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடப்பது எங்களுக்குத் தெரியாது. இதை அறிந்த அயோத்தி சாதுக்கள், ராமர் கோயிலுக்காக தொழுகை அவசியம் இல்லை எனப் புகார் கூறி அறிக்கைகள் வெளியிட்டனர். சிலர் அதற்கு நாம் ஆதரவளிப்பதாகவும் கருதிவிட்டனர். இதனால், அதன் மீதான எங்கள் நிலை தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று” எனத் தெரிவித்தனர்.

பாபர் மசூதி-ராமர் விவகாரத்தில் கடைசியாக சமரசப் பேச்சுவார்த்தையை வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தொடங்கினார். இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் மூத்த நிர்வாகக் குழு உறுப்பினரான மவுலானா சல்மான் நத்வீ ஆதரவளித்திருந்தார். அங்கு ராமர் கோயில் கட்ட முஸ்லிம் அனுமதிக்க வேண்டும் எனவும் சல்மான் வலியுறுத்தியது சர்ச்சைக்குள்ளனாது. இதன் காரணமாக முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மவுலானா சல்மானை நிர்வாகக்குழுவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.