அமைந்தகரையில் பயங்கரம்; 13 வயது அத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன்: கண்டித்த அத்தை கொலை

0
0

13 வயது அத்தை மகளைக் காதலித்த 15 வயது சிறுவன், காதலைக் கண்டித்த அத்தையைக் கொன்று தற்கொலை போன்று சித்தரித்து தப்பினார். போலீஸார் 4 நாட்களுக்குப் பின் சிறுவனைக் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரை வள்ளலார் தெருவில் வசிப்பவர் சங்கரசுப்பு (43). இவரது மனைவி தமிழ்ச்செல்வி(35). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சங்கரசுப்பு வீட்டின் அருகிலேயே மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 2-ம் தேதி வழக்கம்போல் வீட்டுக்கு மதிய உணவு அருந்த சங்கரசுப்பு வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்துகிடக்க வீட்டுக்குள் அலங்கோலமான நிலையில் தமிழ்ச்செல்வி கையில் மணிக்கட்டு அறுந்த நிலையில் ரத்தம் வழிந்தோடக் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரசுப்பு அக்கம்பக்கத்தார் உதவியுடன் போலீஸாருக்கு புகார் அளித்துவிட்டு, தமிழ்ச்செல்வியை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வந்துள்ளார். மருத்துவர்கள் தமிழ்ச்செல்வியை சோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துபோனது தெரிய வந்தது.

மருத்துவமனைக்கு வந்த அமைந்தகரை போலீஸார் தமிழ்ச்செல்வியின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கையில் மணிக்கட்டுக்கு உட்புறம் ஆழமாக வெட்டுக்காயம் இருந்ததால் தமிழ்ச்செல்வி கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் கருதினர்.

தமிழ்ச்செல்வியும் தானும் சந்தோஷமாகத்தான் வாழ்க்கை நடத்தி வந்ததாகவும் தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. காலையில்கூட உற்சாகமாகப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தன்னையும் கடைக்கு அனுப்பி வைத்தார் என்று போலீஸ் விசாரணையில் சங்கரசுப்பு தெரிவித்திருந்தார்.

போலீஸார் வேறு யாராவது வீட்டுக்கு வந்து சென்றார்களா? என்று விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் தமிழ்ச்செல்வி முகத்தில் தலையணை போன்ற ஒன்றால் அழுத்தி மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக வந்தது.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அக்கம் பக்கத்தவர் கொடுத்த தகவலில் காலையில் தமிழ்ச்செல்வியின் மருமகன் 15 வயது சிறுவன் வீட்டுக்கு வந்துசென்றது தெரியவந்தது.

15 வயது சிறுவன் தானே என்று சாதாரணமாக விசாரணை நடத்திய போலீஸார், நடந்தது தற்கொலை அல்ல கொலை என்று தெரிந்தவுடன் சிறுவனை அழைத்து தீவிரமாக விசாரணை நடத்தியபோது அச்சிறுவன் கூறியது திடுக்கிட வைத்தது.

அத்தை தமிழ்ச்செல்வியின் மகளை தான் விரும்பியதாகவும், இதைத் தெரிந்து கொண்ட அத்தை, ‘இது படிக்கிற வயது, 15 வயது சிறுவனுக்கு என்ன இப்படிப்பட்ட நினைப்பு என்று கண்டித்தார்’ என்று கூறியுள்ளார்.

கடும் ஆத்திரம் அடைந்த தான் கடந்த 2-ம் தேதி அன்று காலை அத்தை வீட்டுக்குச் சென்றதாகவும் அங்கு தனக்கும் அவருக்குகும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதத்தின் முடிவில் அத்தையைக் கட்டிலில் தள்ளி கரடி பொம்மையால் அவர் முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்தக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க தற்கொலை போன்ற எண்ணத்தை உருவாக்க அவரது கை மணிக்கட்டில் ஆழமாக அறுத்துவிட்டு தப்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் சிறுவனைக் கைது செய்தனர். சிறுவன் ஒருவன் பால்ய காதல் காரணமாக சொந்த அத்தையையே கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.