அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சி: நிறுத்தியது தென்கொரியா

0
0

அமெரிக்காவுடன் இணைந்து நடத்தவிருந்த வருடாந்திட ராணுவ பயிற்சியை  தென்கொரியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அமைச்சர்கள் சந்திப்புக்குப் பிறகு  அந்நாட்டின் உள் துறை அமைச்சர் பூ குயும் பேசும்போது, “அமெரிக்காவுடன் தென்கொரியா இணைந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்திய ராணுவ பயிற்சியை இந்த வருடம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப  இந்த ஆண்டு இந்த பயிற்சியை தற்காலிமாக நிறுத்தி வைக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.

சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துக் கொண்ட உச்சி மா நாட்டில் அணுஆயுத சோதனை தொடர்பாக விவகாரத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தவிருந்த வருடாந்திர ராணுவ பயிற்சியை தற்காலிகமாக கைவிடுவதாக அமெரிக்காவும் கூறியிருந்தது. தென் கொரியாவின்  இந்த முடிவை வடகொரியா வரவேற்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை நடத்தியது.

வடகொரியாவுக்கு எதிராக  அமெரிக்கா – தென் கொரிய ராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது.

இதன் பின்னர் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.