அமெரிக்காவில் இந்திய மாணவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை: சிறிது நேரத்தில் குவிந்த நிதியுதவி

0
0

அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் ஹோட்டலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த மாணவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சரத் கொப்பு(வயது25) என்பது தெரியவந்தது. மென்பொருள் பொறியாளரான சரத் கொப்பு, மிசோரி மாநிலம், கனாஸ் சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

சரத் கொப்பு படித்துக்கொண்டே, அங்குள்ள ஜேபிஷ் அன்ட் சிக்கன் மார்க்டெ எனும் ஹோட்டலில் பகுதிநேரமாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வழக்கம் போல் ஹோட்டலுக்கு சென்ற சரத் கொப்புவை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு தப்பிவிட்டார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் கொப்பு, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.

இது குறித்து கனாஸ்சிட்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து, ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரவுன் கலரின் வெள்ளை கோடிட்ட சட்டை அணிந்த நபர் சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஹோட்டலுக்கு விடுமுறைவிடப்பட்டது. உள்ளூரில் வெளிவரும் நாளேட்டுக்கு துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர்களும், ஹோட்டலில் பணியாற்றுபவர்களும் பேட்டி அளித்துள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஹோட்டலில் இருந்து 5 முறை துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்டோம் என்று ஹோட்டலுக்கு அருகே இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலில் பணியாற்ற ஊழியர்கள் கூறுகையில்,” துப்பாக்கி வைத்திருந்த நபர் அனைவரிடமும் பணத்தைக் கொடுங்கள் இல்லாவிட்டால் சுட்டுவிடுவேன் எனத் தெரிவித்தார். இதைக் கண்ட ஹோட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அப்போது, சரத் கொப்பு துப்பாக்கி வைத்திருந்தவரிடம் இருந்து தப்பி பின்பக்க கதவுவழியாக தப்பிக்க முயன்றார். அப்போது, அந்த நபர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கொப்புவின் முதுகில் சுட்டார் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சரத் கொப்புவை சுட்டவர் குறித்து அடையாளம் கூறுவோருக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு அளிக்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். கனாஸ்சிட்டி போலீஸார் விடுத்த அறிவிப்பில், “ சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற குற்றவாளியைத் தேடி வருகிறோம். சரத் இந்தியாவைச் சேர்ந்தவர். குற்றவாளி குறித்து யாரேனும் தகவல் அளித்தார் 10 ஆயிரம் டாலர் பரிசு அளிக்கப்படும் எனத் தெரிவித்து சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே சிக்காகோ மாநிலத்தில் உள்ள இந்தியத் தூதர் விடுத்த அறிவிப்பில், ‘‘கனாஸ்சிட்டி துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நாங்கள் இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தாரிடம் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இந்திய அதிகாரிகள் கனாஸ்சிட்டி விரைந்துள்ளனர்’’ எனத்தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் நகரைச் சேர்ந்தவர் சரத் கொப்பு. ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் சரத் கொப்பு பணியாற்றி வந்தார். அமெரிக்கவில் உயர்கல்வி பயில்வதற்காக வந்திருந்தார். சரத் கொப்புவின் தந்தை ராம் மோகன், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

சரத் கொப்பு கொல்லப்பட்ட செய்தி  ராம்மோகனுக்கு முறைப்படி இந்திய தூதரக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் கொப்புவின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யக்கோரி தெலங்கானா என்ஆர்ஐ அமைச்சர் ராமா ராவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ராம் மோகன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சீனாவாஸ் குச்சிபோட்லா(32)  கனாஸ்சிட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கொல்லப்பட்டார். ஆனால், இனவெறி காரணமாக கடற்படை வீரர் ஆடம் புரிங்டன் என்பவரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டில் பலியான சரத் கொப்புவின் உறவினர், சரத்கொப்புவின் உடலை இந்தியா கொண்டு செல்வதற்காக நிதியுதவி கேட்டு “கோபன்ட்மி” எனும் இணையதளக் கணக்கை உருவாக்கினார். இந்தக் கணக்கில் 3 மணிநேரத்தில் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி குவிந்தன.

இதற்கிடையே சரத் கொப்பு படித்துவந்த மிசோரி பல்கலைக்கழகத்தின் சார்பில், கொப்புவின் குடும்பத்தாருக்கு முறைப்படி தகவல் அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.