அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உணவகத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் வீடியோ வெளியீடு: தகவல் தருபவருக்கு பரிசு அறிவிப்பு

0
0

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில், இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (25). இவர் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வி படித்து வந்தார். கான்சாஸ் சிட்டியில் உள்ள ‘ஜே’ஸ் பிஷ் அண்ட் சிக்கன் மார்க்கெட்’ என்ற உணவகத்தில் பகுதி நேர வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர் பணியில் இருந்தார்.

அப்போது ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சித்தார். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தப்பியோடினர். அவர்களுடன் சரத் கொப்புவும் தப்பிக்க முயற்சித்தார். அதற்குள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடினார். அதில் சரத் கொப்பு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் சரத் கொப்புவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரின் சிசிடிவி வீடியோவை கான்சாஸ் போலீஸார் நேற்று வெளியிட்டனர். அந்த மர்ம நபரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த குற்றச் செயல் தொடர்பாக இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பற்றிய விவரமும் தெரியவில்லை.

இதுகுறித்து கான்சாஸ் போலீ ஸார் கூறும்போது, ‘‘கொள்ளை அடிக்க முயற்சி நடந்ததாகவே தற்போது நாங்கள் நம்புகிறோம். இந்தக் கொலையில், இனவெறி இருப்பதாகத் தெரியவில்லை’’ என்றனர்.

இதற்கிடையில் சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கொப்புவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகின்றனர். அவருடைய உடலை ஹைதராபாத் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த சரத் கொப்புவின் தந்தை ராம்மோகன் கொப்பு, ஹைதராபாத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் மாலதி இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘என் மகன் பணிபுரிந்த ரெஸ்டாரன்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய தகவல் கிடைத்தது. அதில் என் மகனின் நண்பர்கள் 2 பேர் தப்பிவிட்டதாகவும், என் மகனுக்கு குண்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறினர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது’’ என்று கண்ணீருடன் கூறினார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவமும் கான்சாஸ் சிட்டிக்கு அருகில்தான் நடந்தது. அவரை ஆடம் புரிங்டன் (51) என்பவர் இனவெறி காரணமாக சுட்டுக் கொன்றார். இப்போது சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டதால், இதுவும் இனவெறியால் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், ஸ்ரீனிசாஸ் குச்சிபோட்லாவை கொன்ற ஆடம் புரிங்டனுக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.