அமித்ஷா பேசியதை திரித்து கூறவில்லை: தமிழக அமைச்சருக்கு எச்.ராஜா பதில்

0
0

பாஜக தலைவர் அமித்ஷா பேசியதை மொழிபெயர்க்கும்போது தாம் திரித்து கூறியதாக தமிழக அமைச்சர் கூறுவதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் அவர் சொட்டு நீர் பாசனம் என்று சொன்னதை, நான் ‘சிறுநீர் பாசனம்’ என்று கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பி வருகிறார்கள். உண்மையில் சொட்டு நீர் பாசனம் என்பதைத்தான் சிறு நீர் பாசனம் என்று கூறினேன். இந்த வார்த்தை டிக்ஸ்னரியிலும் உள்ளது. ஆனால், அதைத் திரித்து மீம்ஸ் போடுகிறார்கள். இதேபோன்று மீம்ஸ் போடுபவர்களுக்கு திமுக ரூ.200 வழங்குகிறது.

மேலும், அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு குறித்து அமித்ஷா சொன்னதை, நான் ஊழல் மிகுந்த அரசு என்று திரித்துக் கூறியதாக தமிழக அமைச்சர் ஒருவர் கூறி வருகிறார். அவருக்கு இந்தி தெரியவில்லை. நல்ல ஆசிரியரை வைத்து அவர் இந்தி கற்றுகொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை அவர் தெரிந்து கொள்ளலாம். அதற்கு அமைச்சருக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கிறேன்.

சமூக விரோத சக்திகளால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதில், தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும். இதனால் தான் தமிழகம் தொழில்துறையில் 15-வது இடத்தில் உள்ளது. இதற்கு, அரசு மட்டும் காரணமல்ல, பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நக்சலைட்டுகளும்தான் காரணம். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.