அப்பாவிகள் மீது தாக்குதல் விவகாரத்தில் எதிர்கட்சிகளின் விபரீத சிந்தனை: பிரதமர் மோடி கடும் தாக்கு

0
0

அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது மிகக் கொடூரமான குற்றம், ஆனால் இதை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது அவர்களது விபரீதமான சிந்தனையை காட்டுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

பசுக்களை கடத்தி செல்வதாக கூறியும், குழந்தைகளை கடத்துவதாகவும் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் வரும் தகவல்ளை உண்மையென நம்பி இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி இன்று பேட்டியளித்தார். அப்போது அப்பாவிகள் மீதான தாக்குதல் குறித்த அவர் விரிவாக பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கும்பலாக சேர்ந்து கொண்டு அப்பாவிகளை தாக்கி கொலை செய்யும் வன்முறை நடந்து வருவது வருந்ததக்கது. இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தாலும் அதனை ஏற்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபற்றி நானும், எங்கள் கட்சியினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்வதில் எங்கள் அரசு எப்போதுமே கவனத்துடன் செயல்படுகிறது. ஆனால் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியாலாக்கப் பார்க்கின்றன. அவர்களது விபரீதமான சிந்தனையே இதற்கு காரணம்.

வன்முறை மற்றும் குற்றச்செயல்களை அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்கட்சிகள் இதை வைத்த அரசில் செய்வது வேதனையானது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.