அபிமன்யுவின் மரணத்திற்கு பின்னால் இருந்த இரகசியங்கள் | Reasons behind abhimanyu’s death

0
0

குருஷேத்திர போரில் அர்ஜுனனும், கர்ணனும் மிகச்சிறப்பாய் போர்புரிந்தாலும் அவர்களையும் மிஞ்சிய ஒரு மாவீரன் இருந்தான் அவன்தான் பதினாறு வயது மட்டுமே நிரம்பிய அபிமன்யு.

விதி வசத்தாலும், கௌரவர்களின் சூழ்ச்சியாலும் அபிமன்யு தன் பெரியப்பா மாவீரன் கர்ணன் கைகளாலேயே கொல்லப்பட்டான். முக்காலமும் அறிந்த ஸ்ரீகிருஷ்ணர் தன் பிரியமான மருமகன் அபிமன்யுவை ஏன் சாக அனுமதித்தார் என்பது பலருக்கும் புரியாத ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அபிமன்யு

அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரைக்கு மகனாக பிறந்தவன். தன் அம்மாவின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சக்கர வியூகத்தை உடைக்க கற்றுக்கொண்ட வீரன். ஆனால் அதிலிருந்து வெளியே வரும் வித்தையை அவன் கற்றுக்கொள்ளவேயில்லை அதுவே பின்னாளில் அவனது உயிரையும் பறித்தது. தன் தாயை விட திரௌபதி மீது அதிக பாசம் வைத்திருந்த அபிமன்யு திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற திருமணம் முடிந்த கையோடு மகாபாரத போரில் அர்ஜுனனின் ஆயுதமாய் இருப்பேன் என உறுதிகொண்டு பங்கேற்றான்.

போரில் அபிமன்யு

போரில் அபிமன்யு

போரில் பல மாவீரர்கள் இருந்த போதும் நட்சத்திரங்களிடையே ஜொலிக்கும் துருவநட்சத்திரமாய் தனித்துவத்துடன் ஒளிர்ந்தான் அபிமன்யு. போரில் பலரும் பீஷ்மரை எதிர்க்க பயந்தபோது அம்புகளாலேயே சுவர் கட்டி கங்கை மைந்தன் பீஷ்மரை தடுத்தான். ‘இளங்கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்றாற்போல் மாவீர்களெல்லாம் எதிர்கொள்ள தயங்கும் பீஷ்மரை இந்த பதினாறு வயது சிறுவன் வீரத்துடன் எதிர்த்து நின்றான். எதிர்த்து நின்றது மட்டுமின்றி பீஷ்மரே வியக்கும் வண்ணம் போர் புரிந்தான். பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியாரின் ரதத்தை தன் கணை கொண்டு சிதறடித்தான், கௌரவர்களில் மூத்தவனான துரியோதனனுக்கு அறைகூவல் விடுத்து தோற்கடித்தான். இது போன்ற எண்ணற்ற சாகசங்களை தன் பதினாறாவது வயதிலியே மகாபாரத போரில் நிகழ்த்தினான் அபிமன்யு.

சக்கர வியூகம்

சக்கர வியூகம்

போரின் பதிமூன்றாவது நாளில் கௌரவ சேனாதிபதி துரோணாச்சாரியார் சக்கர வியூகத்தை அமைத்தார். அபிமன்யு சுபத்திரை வயிற்றில் இருக்கும்போதே சக்கர வியூகத்தை உடைக்க கற்றுக்கொண்டவன். அர்ஜுனன் தொலைவில் போர் புரிய சென்றதால் சக்கர வியூகத்தை உடைக்க இயலாமல் பாண்டவ சேனை திணறியது. அபிமன்யு சக்கர வியூகத்தை தான் உடைப்பதாகவும் தான் உள்ளே சென்றவுடன் மற்ற பாண்டவர்களும், வீரர்களும் உள்ளே வருமாறும் கூறி சென்றான். அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே பிரவேசித்தவுடன் பாண்டவர்கள் ஜயத்ரதனால் தடுக்கப்பட்டார்கள். ஜயத்ரதன் சிவபெருமானிடம் வாங்கிய வரத்தால் அவனை தாண்டி யாரும் உள்ளே செல்ல இயலவில்லை.

அபிமன்யு மரணம்

அபிமன்யு மரணம்

சக்கர வியூகத்திற்குள் மாட்டிக்கொண்ட அபிமன்யு தீப்பிழம்பை கக்கும் சூரியனாய் எதிரிகள் அனைவரையும் வதம் செய்து தள்ளினான். அவனின் மாபெரும் வீரத்தை கண்ட துரோணாச்சாரியார், கர்ணன் போன்ற மாவீரர்கள் அவனின் வீரத்தை புகழ்ந்தனர். மறுபுறம் நெருப்பில் விழும் வீட்டில் பூச்சிகளாய் கௌரவ சேனை அபிமன்யுவால் துவம்சம் செய்யப்பட்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத துரியோதனன் அனைத்து மாவீரர்களுக்கும் அபிமன்யுவை கொல்ல கட்டளையிட்டான். துரோணாச்சாரியார், கர்ணன், அசுவத்தாமன், சல்லியன், பூரிசிரவசு, துரியோதனன், துச்சாதனன் என ஏழு மாவீர்கள் சேர்ந்து அந்த பதினாறு வயது பாலகனுக்கு எதிராக போர் புரிய தொடங்கினர். எதற்கும் சளைக்காத அபிமன்யு அப்பொழுதும் போர் புரிந்தான். அதர்மமே உருவான துரியோதனன் அபிமன்யுவை தாக்க கர்ணணுக்கு உத்தரவிட்டான். கனத்த மனதோடு கர்ணன் அம்புகளை எய்து அபிமன்யுவின் வாள், தேர், வில் என அனைத்தையும் உடைத்தெறிந்தான். உடம்பில் பல காயங்களுடனும், சக்தியே இல்லாத நிலையிலும் தேரின் சக்கரத்தை எடுத்து போர் புரிய தொடங்கினான் அபிமன்யு. இறுதியில் துரியோதனின் ஆணைக்கிணங்க கண்ணீர் வழியும் விழிகளோடு தன் தமையனின் அபிமன்யுவை கொன்றான் கர்ணன்.

கிருஷ்ணரின் அமைதி

கிருஷ்ணரின் அமைதி

முக்காலமும் உணர்ந்த திருமாலின் அவதாரமான கிருஷ்ணன் அபிமன்யுவின் மரணத்தை குறித்தும் முன்னரே அறிந்திருந்தார், இருப்பினும் இரண்டு காரணங்களால் அவரால் அபிமன்யுவின் மரணத்தை தடுக்க இயலவில்லை. முதல் காரணம் அபிமன்யு சந்திர தேவனுடைய மறுபிறவி ஆவான். அவரின் உதவி பூமிக்கு தேவை என தேவர்கள் வினவியபோது மகனை பிரிய விரும்பாத சந்திர தேவன் தன் மகன் பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூமியில் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு மகனை அனுப்ப சம்மதித்தார். இதனை கிருஷ்ணர் நன்கு அறிவார் எனவேதான் அவர் அபிமன்யுவை காப்பாற்ற முயலவில்லை. மற்றொரு காரணம் பீஷ்மரை தன் கைகளாலேயே கொன்றுவிட்டோமே என்ற விரக்தியில் இருந்த அர்ஜுனனுக்கு தன் கௌரவ சகோதரர்களை கொல்ல மனம் வரவில்லை. இதை அறிந்த கிருஷ்ணன் அபிமன்யுவின் இழப்பு அர்ஜுனனை கோபம் கொள்ள செய்யும் எனவே அர்ஜுனன் கௌரவர்களை வதம் செய்ய தயங்கமாட்டான் என எண்ணினார். ஆதலால்தான் உலக நன்மைக்காக தன் உயிருக்கு இணையான அபிமன்யு சாகும்போது கிருஷ்ணர் எதுவும் செய்யாமல் கண்ணீருடன் அமைதிகாத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்