அபாய அளவை தாண்டியதால் இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு: வினாடிக்கு 7 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம்

0
0

இடுக்கி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 2401.6 அடியை கடந்தது. இதனால் அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து வினாடிக்கு 7 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுபோலவே செருதோணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. வெள்ள நீர் அடுத்த சில மணிநேரத்தில் எர்ணாகுளம் மாவட்டத்துக்குள் வரும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெரியாறு படுகையில் உள்ள 10 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ராணுவத்துடன், கப்பல் படை மற்றும் கடலோரா காவல்படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

 

பெரிய அணை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

வளைவு வடிவ அணைகளில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரியது இடுக்கி அணை. கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப் பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்த அணையின் மொத்த தண்ணீரும் மின்சாரம் எடுக்கப்பட்ட பின்பு, வேறு எந்த விவசாய பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுவதில்லை. உபரி நீர் முழுவதம் மொத்தமாக சென்று கடலில் கலந்து விடுகிறது. இடுக்கி அணையில் தற்போதுள்ள 72 டிஎம்சி நீரும் கடலில் சேன்று வீணாக கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.